கோடைக்காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசத்தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையானது 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வரும் நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீரேற்றம் அதிகமுள்ள பானங்களை அருந்துமாறு மருத்துவர்கள் தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இளநீர், மோர், தர்பூசணி, கரும்புச்சாறு கடைகள் ஏற்கெனவே சாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த கோடைக் காலத்தில் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் "ஐஸ் ஆப்பிள்" என்ற நுங்கு பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்கிறார் வேளாண் ஆலோசகரான அக்ரி.சு.சந்திரசேகரன். நுங்கு குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
நுங்கு- சிறு அறிமுகம்:
நம்முடைய மாநில மரமான பனை மரத்திலிருந்து தான் நுங்கு கிடைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் (PALMYRA PALAM) என்றும் பனை நுங்கு (PANAI NUNGU) என்று பலரால் அழைக்கப்படுகின்றது. முதிர்ந்த பனை மரத்தில் 6 முதல் 12 பாளைகள் தள்ளும். இதில் 8 முதல் 10 பனம் குலைகளில் சராசரியாக ஒரு குலையில் 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம்பழமாக மாறி கீழே விழும்.
நுங்குவிலுள்ள சத்துகளின் விகிதம்:
100 கிராம் நுங்கில் 92.69% கிராம் நீர்சத்தும், 0.64 கிராம் புரதமும், 0.12 கிராம் கொழுப்பு, 0.26% கிராம் தாது உப்புகளும், 6.29 கிராம் சர்க்கரை சத்துகளும் உள்ளன.
நுங்கு பயன்பாடு:
இந்த வெயிலுக்கு எவ்வளவு நீரை அருந்தினாலும் தாகம் அடங்கவில்லை என பலர் கூறுவார்கள். நுங்கு சாப்பிட்டால் நிச்சயமாக தாகம் தணியும். நுங்கில் சோடியம், பொட்டாசியம் இருப்பதால் அவை நீரிழப்பு அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது. இந்த கடுமையான வெயில் காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் தாகம் தணிவதுடன் நீர்சத்து இழப்பும் தடுக்கப்படுகின்றது.
- உடல்நல வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. அதே போல வயிற்று பிரச்சனை, செரிமான கோளாறு, நீர்சத்து குறைபாடாலும்,மலச்சிக்கல் பிரச்சினையையும் சந்திக்க நேருவோருக்கு நுங்கு அருமருந்தாகிறது. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்த பின்பு 2-3 நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை காணாமல் போகும்.
- எடையை (OVER WEIGHT) குறைக்க விரும்புபவர்கள், நுங்கு சாப்பிட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுவாக நுங்குவானது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தூண்டாது.
- நுங்கில் அதன் சதைப் பகுதியை மட்டுமல்லாமல், அதன் தோலையும் சேர்த்து சாப்பிட்டால் தான் முழுமையான சத்துகள் கிடைக்கும். ஆனால், சிறுகுழந்தைகள், வயதானவர்களுக்கு அது (தோல்) செரிமானம் ஆகாது என்பதால் வெறும் நுங்கை மட்டும் கொடுப்பது நல்லது.
- வியர்குரு கோடைக்காலத்தில் வர வாய்ப்புள்ளது. சருமத்தில் சிறுசிறு கொப்பளங்கள் போல வரும். அதற்கு நுங்கின் தண்ணீரை தடவி விடலாம் நுங்கையும் பேசியல் போன்று பூசலாம். ஏகப்பட்ட மருத்துவ குணமுள்ள நுங்கு இந்த ஏப்ரல, மே ஜூன் மாதங்களில் தான் கிடைக்கும்.
பொதுவாக அந்தந்த பருவத்திற்கேற்ற காய்,பழங்களை வாங்கி உண்பதன் மூலம் குறிப்பிட்ட பருவக்காலத்தில் உண்டாகும் உடல் நல பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். நாமும் மறந்துவிட்ட பாரம்பரிய பனை மரத்தை நடுவதில் ஆர்வத்தை செலுத்துவோம் என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
(மேற்குறிப்பிட்ட மருத்துவ ஆலோசனை தொடர்பான தகவல்களில் முரண்கள்/ சந்தேகங்கள் இருப்பின் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக்கொள்ளலாம்- தொடர்பு எண்: 9443570289)
Read also:
தீவனச் செலவில்லாமல் பன்றி வளர்ப்பு- அசத்தும் சிங்கம்புணரி யுவராஜ்!
மதுரையில் வீசிய வெப்ப அலை- சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!