உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெருகிவரும் உலகளாவிய மக்கள் தொகையினால் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்த மக்கள் தொகை காரணமாக உலகளவிலான மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டியது. இந்த ஆண்டு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவை இந்தியா முந்தியது குறிப்பிடத்தக்கது.
ஐநா சபை- மக்கள் தொகை தினம்:
அதிகரித்து வரும் மக்கள்தொகையினால் வறுமை, பொருளாதார சவால்கள் மற்றும் பொது சுகாதார பிரச்சினைகள் போன்ற சிக்கல்களை நாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், அவற்றைத் தீர்க்கும் நோக்கில் பணியாற்றுவதற்கும், 1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உலக மக்கள்தொகை தினம் உருவாக்கப்பட்டது.
இந்த உலக மக்கள்தொகை தினத்தில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐந்து நாடுகளின் மதிப்பாய்வு இங்கே.
இந்தியா: 1,42.58 கோடி | ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மக்கள்தொகையின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின்படி, ஏப்ரல் 2023 இல், இந்தியாவின் மக்கள்தொகை 1,425,775,850 மக்களைத் தாண்டியது. இதன் மூலம் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனாவினை இந்தியா முந்தியது.
சீனா: 1,42.57 கோடி | 2022 இல் சீனாவின் மக்கள்தொகை உச்சத்தை எட்டியிருப்பதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சரிவைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. ஐ.நா.வின் கணிப்புகள் படி சீன மக்கள்தொகை மேலும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா: 33.19 கோடி | 1950 மற்றும் 2010 க்கு இடையில் அமெரிக்காவின் மக்கள் தொகை 15.1 கோடியில் இருந்து 30.9 கோடியாக இரட்டிப்பாகியது. கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரங்களில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் அமெரிக்க மக்கள்தொகை வேகமெடுத்துள்ளது.
இந்தோனேசியா: 27.38 கோடி | இந்தோனேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட தீவுகளில் ஒன்றான ஜாவா உள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளின்படி நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 56 சதவீதம் பேர் ஜாவா தீவில் வாழ்கின்றனர் மற்றும் நாட்டில் சராசரியாக 30 வயதுடைய இளம் வயது மக்கள் தொகையினர் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான்: 23.14 கோடி | மக்கள்தொகை அடிப்படையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும். அதன் இரண்டு மெகாசிட்டிகள், கராச்சி மற்றும் லாகூர் ஆகியவை மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். தற்போது பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டம்- தன்னார்வலர்களை நியமிப்பதில் கடும் கட்டுப்பாடு