சமீபத்தில் ஐ.நா.சபை Food Waste Index Report 2024-யினை வெளியிட்டது. அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் கால் பங்காவது வீணாக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையானது உணவுக் கழிவுப் பிரச்சனை செல்வந்த நாடுகளில் மட்டும் இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. உலகம் முழுவதும் 78.3 கோடி நபர்கள் நாள்பட்ட பட்டினியை எதிர் நோக்கி வரும் இதே சூழ்நிலையி தான் கடந்த 2022 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வீணடிக்கப்பட்ட உணவு பொருட்களின் அளவு 105 கோடி மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது மொத்த உணவு உற்பத்தியில் 19% என ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. Food Waste Index Report தொடர்பான தனது பார்வையினை வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ஆய்வு மேற்கொண்ட விதம் எப்படி?
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையானது வீடுகள், உணவு தொடர்பான சேவை நிறுவனங்கள், சில்லறை உணவுப் பொருள் விற்பனையாளர்கள் அளிக்கும் தரவுகளை (உலகம் முழுவதும்) உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, வருடந்தோறும் தனிநபர் சுமாராக 79 கிலோ உணவை வீணாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. உணவு பொருட்களை வீணாக்குவதில் முதலிடத்தில் இருப்பது வீடுகள் தான் (60 சதவீதம்). அதனைத் தொடர்ந்து, உணவு சேவை நிறுவனங்கள் (28%), சில்லறை விற்பனை நிறுவனங்கள் (12%) வீணடிக்கின்றன.
2030- புதிய இலக்கு நிர்ணயம்:
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் உணவுப் பொருட்கள் வீணாகுவதை பாதியாக குறைப்பதை இலக்காக கொண்டு உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட வகையில், உலகம் முழுவதும் உணவு கழிவுகள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலும் ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள், பொது-தனியார் கூட்டாண்மை மூலம் உணவு கழிவுகளில் கணிசமான குறைப்புகளை எட்டியுள்ளது நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருள் வீணடிக்கப்படுவதால் உண்டாகும் பாதிப்பு:
- உணவுப் பொருள்களை வீணடிப்பதும் பருவநிலை மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
- வீணாகும் உணவுப்பொருட்களின் வாயிலாக 8 முதல் 10% பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுவதாகவும், 30% பூவி வெப்ப மயமாக்கலுக்கு இந்த வாயுக்கள் காரணமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக உணவுப் பொருட்களை வீணாக்குவது என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத காரியம் தான். ஆனால் இதை எண்ணி யாரும் ஒரு வினாடி கூட கவலைப்படுவதில்லை.
நாம் வீணாக்குவது ஓரு தானியம் (பருக்கை) என்று நினைத்தால் அது தவறானது. அந்த தானியம் விளைய பயன்படுத்தப்பட்ட நிலம், விவசாயிகளின் உழைப்பு இடுபொருட்கள் (நீர்ப்பாசனம், உரம் அறுவடை ) மற்றும் விற்பனைக்கு வரும் வரையிலான பல தொழிலாளர்களின் உழைப்பும் அந்த தானியத்தோடு சேர்ந்து வீணாகுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு: Food Waste Index Report 2024
Read more:
நாங்கள் விவசாயிகளுக்கு போட்டியாளர்கள் அல்ல- Arya.ag இயக்குனர்கள் பேச்சு
அடுத்த சில மணி நேரங்களில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!