ஊறுகாய் என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம், சிலருக்கு எச்சில் ஊறத் தொடங்கிவிடும். இந்திய உணவு முறையில் ஊறுகாயிற்கு என தனித்துவம் உள்ள நிலையில் ஒரு கிராமமே ஊறுகாய் தயாரிப்பு மற்றும் விற்பனையினை நம்பி தான் கடந்த 40 ஆண்டுகளாக உள்ளனர் என்றால் நம்புவீர்களா?
ஊறுகாய் கிராமம் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது என்றால், அங்குள்ள மக்களின் வாழ்வாதரத்தில் ஊறுகாய் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கற்பனை செய்துக்கொள்ளுங்கள். ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமத்தில் உள்ள மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஊறுகாயினை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
உசுலுமறு கிராமமானது கோதாவரியின் துணை நதியான வசிஸ்டாவின் கரையில் அழகிய அழகுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது ராஜமகேந்திரவரத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும், தனுகு நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்த உடனேயே, ஒவ்வொரு வீட்டிலும் உலகப் புகழ்பெற்ற மாங்காய் ஊறுகாய் மற்றும் எலுமிச்சை, இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய் உட்பட பல்வேறு ஊறுகாய் தயாரிப்பில் பிஸியாக இருப்பதைக் காணலாம். இந்த கிராமத்தில் உள்ள ஊறுகாய் அதன் காரமான, சுவையான, மலிவான அதே நேரத்தில் சமரசம் செய்யப்படாத தரத்துடன் இருப்பதாலே புகழ்பெற்று விளங்குகிறது.
உசுலுமறுவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஊறுகாய் தயாரிப்பது பில்லா ஸ்ரீராமமூர்த்தி குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. இப்போது, கிராம மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் இந்த குடிசைத் தொழிலை நம்பியிருக்கிறார்கள். கிராமத்தில் ஊறுகாய் உற்பத்தியாளர்களால் சராசரியாக ஒரு பெண் தினசரி சுமார் 300 ரூபாயும், ஆண் 450 ரூபாயும் சம்பாதிக்கிறார்கள்.
பெண்கள் ஊறுகாய் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆண்கள் தங்கள் வழக்கமான வாடிக்கையாளர்களான கடைகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு தயாரிப்புகளை வழங்குவதைத் தவிர மாநிலத்திற்குள்ளும் வெளியிலும் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத், விஜயவாடா, குண்டூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், திருப்பதி, சென்னை, பெங்களூர் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற முக்கிய நகரங்களிலும் உசலுமறு ஊறுகாய் சக்கை போடு போடுகிறது.
ஊறுகாய் தயாரிப்பாளரும், விற்பனையாளருமான கொம்மாரா வெங்கடேஸ்வரராவ் கூறுகையில், இரண்டு தலைமுறைகளாக ஊறுகாய் தயாரிக்கும் தொழிலில் இவரது குடும்பம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், முதலீடு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும், வருமானம் திருப்திகரமாக இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
அரசு அல்லது வங்கிகளிடமிருந்து போதிய ஆதரவு இல்லாத நிலையில், நாங்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி பல தசாப்தங்களாக தொழில் செய்து வருகிறோம். தொழில் நடத்த அதிக வட்டியும் செலுத்தி வருகிறோம் என வேதனை தெரிவித்தார்.
இந்த ஊறுகாய் வியாபாரத்தை நம்பி கிராமத்தில் பல துணை வணிகங்கள் செயல்படுகின்றன. ஊறுகாய் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் சப்ளையர்களாக சில குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. பண முதலைகளிடம் சிக்கி அதிக வட்டி செலுத்தும் நிலையில், அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் காண்க:
மாதம் ரூ. 3000 ஓய்வூதியம் பெறும் PM-SYM திட்டம்- பயனாளி இறந்தால் என்ன ஆகும்?