உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தக்காளியின் விலை உயர்வினை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இரண்டு பவுன்சர்களை நியமித்துள்ள சம்பவம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விட ஒரு கிலோ தக்காளியின் விலை அதிகமாக விற்கப்படுகிறது.
முந்தைய சாகுபடியில் விளைவித்த தக்காளிகள் சந்தையில் போதிய விலை போகாத காரணத்தினால் பல விவசாயிகள் நடப்பாண்டு தக்காளியினை பயிரிடுவதை தவிர்த்தனர். மேலும் எதிர்பாராத கோடை மழையினால் பயிரிட்ட தக்காளிகளும் சேதமடைந்தது மகசூலும் பெருமளவில் குறைந்தது. இதனால் இந்தியா முழுவதும் தக்காளிக்கு பற்றாக்குறை அதிகரித்து விலையும் நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.
தக்காளி விலை உயர்வு பிரச்சினையை பயன்படுத்தி காய்கறி வியாபாரி ஒருவர் செய்த செயல்தான் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மளிகைக் கடை உரிமையாளரும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) உறுப்பினருமான அஜய் ஃபௌஜி, தனது கடையில் தக்காளிகளை ‘பாதுகாக்க’இரண்டு தொழில்முறை பாதுகாவலர்களை (பவுன்சர்) நியமித்துள்ளார். தக்காளியினை வாங்கும்போது யாராவது பேரம் பேசி ஆக்ரோஷமாக மாறுவதைத் தடுக்க பவுன்சர்களைப் பயன்படுத்தியதாக PTI-யிடம் ஃபௌஜி தெரிவித்துள்ளார்.
ஃபௌஜி முன்னதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி வாரணாசியில் தக்காளி வடிவ கேக்கை வெட்டி கொண்டாடிய போதும் அனைவரின் கவனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் வியாபாரிக்கும் இடையே பேரம் பேசுவதில் வாய்தகராறு ஏற்பட்டு வருகிறது. எனது கடையில் இருந்தவர்களும் பேரம் பேச முயன்றனர்.
எனவே தொடர்ச்சியான வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, எனது கடையில் சீருடை அணிந்த தொழில்முறை பவுன்சர்களை நிறுத்த முடிவு செய்தேன்” என்று ஃபௌஜி செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
இவரது கடையில் கடந்த "ஒன்பது ஆண்டுகளில்" பொருட்களின் விலையேற்றம் பற்றி குறிப்பிடும் பலகையும் உள்ளது, இது நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் விலைவாசி உயர்வை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.
இவரது கடையில் தக்காளியை கிலோ 140-160 ரூபாய்க்கு விற்கிறார். கடைக்கும் முன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவுன்சர்களை நிறுத்தியுள்ளார். அவர் பவுன்சர்களை எவ்வளவு சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினார் என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.
இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் வீடியோவினை பகிர்ந்து மேலும் "BJP தக்காளிக்கு 'இசட்-பிளஸ்' பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் காண்க: