ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என இன்று மேடையில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுக்குறித்து அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை நீலாங்கரை பகுதியிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் செண்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்தனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமின்றி பொருளாதார நிலையில் பின் தங்கிய குடும்பத்தை சார்ந்து அதிக மதிப்பெண் தேர்வில் பெற்ற் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லேஸ் வழங்கியும் கௌரவித்தார்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க:
சூழ்ந்திருத்த மாணவர்களுக்கு மத்தியில் பலத்த கரவொலிக்கு இடையே நடிகர் விஜய் பேசத்தொடங்கினார். “உன்னில் என்னை காண்கிறேன் என்பது போல் உங்களை பார்க்கும் போது, எனக்கு எனது பள்ளிக்கால நாட்கள் நினைவுக்கு வருகிறது. கவர்ச்சிகரமான நியூஸ் எல்லாம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வந்துட்டே இருக்கு. அதில் பாதி பொய்யான தகவல் தான். அதை பகுத்தறியும் தன்மையினை வளர்த்துக் கொள்ளுங்க. நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் எதிர்க்காலத்தில் தேர்ந்தெடுக்கப் போறீங்க. காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது என்பது மிகவும் தவறானது. காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கனு உங்களது பெற்றோர்களிடம் சொல்லுங்கள்” என்றார்.
மேலும் பேசிய விஜய் “முன்பு எல்லாம் ஒரு பழமொழி இருக்கும்- உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேனு, இப்போ அதெல்லாம் மாறிடுச்சு.. இப்போ நீங்க எந்த சோஷியல் மீடியாவினை பாலோ பண்றீங்களோ அதை வைத்து உங்களை தீர்மானிக்கலாம் என்கிற நிலைமை வந்துடுச்சு” என்றார்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்பது தொடர்பான விஜய்யின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுக்குறித்து அமைச்சர் உதயநிதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி, “நான் இன்னும், விஜய்யின் பேச்சு தொடர்பான வீடியோவினை முழுமையாக பார்க்கவில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பது நல்லது தானே. அனைவரும் அரசியலுக்கு வரலாம். யாரையும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்ல நமக்கு உரிமை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் நகர்வுகள் அனைத்தும் அரசியல் வருகையினை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. அடுத்த வருடம் நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க வாய்ப்பில்லை என்றாலும், நிச்சயம் அடுத்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் காண்க:
அடுத்த 3 நாளைக்கு பேய் மழை பெய்யும் மாவட்டங்கள்- சென்னை எப்படி?