ஒவ்வொருவரும் தங்களது ஓய்வுகாலத்திற்காக இப்போதே திட்டமிட வேண்டியது மிக மிக அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் (Investment scheme) உள்ளன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது பிபிஎஃப் (PPF) எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியும், விபிஎஃப் (VPF) எனப்படும் தன்னார்வ ஓய்வூதிய திட்டமும் தான்.
திட்டங்களில் உள்ள அம்சங்கள்
பொது வருங்கால வைப்பு நிதி நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு (Investment) செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். குறிப்பாக தங்களது ஓய்வுகாலத்திற்கு முதலீடு செய்ய நினைப்போருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை (Interest Rate) அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
வட்டி விகிதம்
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது. இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம் (Post office), பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். தற்போது வட்டி விகிதம் 7.1% ஆகும். தன்னார்வ வருங்கால வைப்பு நிதி ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது, பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தினை திட்டமிட ஒரு சிறந்த அம்சமாக இருக்கின்றது.
இந்த திட்டத்திற்கு இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. இந்த இபிஎஃப்க்கு 2019 - 20ம் நிதியாண்டு நிலவரப்படி வட்டி விகிதம் 8.50% ஆகும். . இதற்கு வரி உண்டு. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகையை எடுத்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
VPF திட்டத்தின் சிறப்பம்சம்:
VPF என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்தின் (EPF) நீட்டிப்பாகும். அடிப்படை சம்பளத்தின் 12% பங்களிப்பை EPF கட்டுப்படுத்துகிறது. ஆனால் VPF ஒரு ஊழியரை பிஎஃப் கணக்கில் 12% க்கும் அதிகமாக பங்களிக்க அனுமதிக்கிறது. ஆக இதன் மூலம் நீங்கள் விருப்பப்படும் தொகையை சேமிக்க முடியும்.
சிறந்தது எது?
பொதுவாக PPF விட VPF அதிக வருமானத்தை அளிக்கிறது. PPF திட்டம் 7.1% வட்டியை வழங்கும்போது, VPF 8.5% வட்டியை வழங்குகிறது. VPF-ல் பங்களிப்புகளைச் போடுவது மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது. இதற்கு PPF-ஐ போல, பதிவுசெய்யப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் நீங்கள் ஒரு கணக்கைத் திறக்கத் தேவையில்லை.
விபிஎஃப் மற்றும் பிபிஎஃப் ஆகிய இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக கருதப்படுகிறது. ஏனெனில் சம்பளம் கிடைக்கும் மக்களுக்கு மட்டுமே விபிஎஃப் (VPF) திட்டத்தினை பெற முடியும். ஆனால் சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது. பிபிஎஃப் (PPF) அனைவருக்கும் கிடைக்கும் ஒரு திட்டமாகும். எனினும் விபிஎஃப்பினை விட பிபிஎஃப் -க்கு வட்டி சற்று குறைவு.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சொந்த வீடு கட்ட அரசின் மானியம்! பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா, இல்லையா? செக் பன்னிகோங்க!
முதலீடு செய்து இலாபம் பெற, 100 ரூபாயில் SBI-இல் வங்கிக் கணக்கு!