பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யலாம் எனும் நிலையில், இவற்றில் சிறந்த வாய்ப்பை தேர்வு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை இறங்கு முகமாகி அண்மையில், நான்கு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைந்தது. எனினும், வரும் மாதங்களில் தங்கத்தின் விலை ஏறுமுகம் கொள்ளலாம் என கருதப்படுகிறது. விலை குறையும் போது தங்கத்தில் முதலீடு செய்வது ஏற்ற அணுகுமுறை என்றாலும், எந்த வடிவில் தங்க முதலீட்டை மேற்கொள்வது ஏற்றதாக இருக்கும் என்பதையும் பரிசீலிப்பது அவசியம்.
இடர் உண்டு
தங்க நகை தவிர, டிஜிட்டல் தங்கம், தங்க ஈ.டி.எப்., தங்க மியூச்சுவல் பண்டுகள், தங்க சேமிப்பு பத்திரங்கள் ஆகிய வடிவிலும் முதலீடு செய்யலாம். இவற்றில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை தீர்மானிக்க இடர் அம்சம், பலன், பணமாக்கம், வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாக தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், எல்லா முதலீடுகள் போலவே இதிலும் இடர் அம்சம் உண்டு.
உதாரணமாக தங்க நகை என்றால், அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் அதன் தரத்தை உறுதி செய்வதும் அவசியம். செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் உள்ளன. டிஜிட்டல் தங்கத்தை பொருத்த வரை முதலீடு செய்வது எளிது என்றாலும், ரிசர்வ் வங்கி (Reserve Bank) அல்லது செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் இது வரவில்லை என்பதை உணர வேண்டும்.
தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்கள் தங்க விலையின் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை கொண்டவை. தங்க சேமிப்பு பத்திரம் (Gold Savings Bond) அரசால் வெளியிடப்படுகிறது என்றாலும், அதற்கு நிகரான பவுதீக தங்கம் கிடையாது. அரசின் உறுதி கொண்ட பத்திரமாக அது விளங்குகிறது.
முதலீடு பலன்
தங்க முதலீடு அளிக்கும் பலனும், அவற்றின் முதலீடு வழிக்கு ஏற்ப வேறுபடும். தங்க சேமிப்பு பத்திரம், தங்கத்தின் மதிப்பு தவிர, ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி பலன் அளிக்கிறது. தங்க ஈ.டி.எப்., எனில் தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப பலன் பெறலாம். தங்க நகை எனில், செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட அம்சங்கள் பலனை குறைக்கலாம்.
பொதுவாக தங்கம் பணமாக்கும் தன்மையை கொண்டது என்றாலும், தங்க சேமிப்பு பத்திரம் எனில் முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும். வரி விதிப்பை பொருத்த வரை, தங்க முதலீட்டிற்கு குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி பொருந்தும். தங்க பத்திரங்கள் எனும் முதிர்வு காலம் வரை வைத்திருந்தால் மூலதன ஆதாய வரி விலக்கு பெறலாம்.
இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்து பொருத்தமான முதலீடு வழியை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் திட்டம் இருந்தால் தங்க பத்திரங்கள் ஏற்றதாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
குறுகிய கால அளவு எனில் தங்க இ.டி.எப்., வழியை நாடலாம். எனினும், முதலீடு நோக்கில் தங்க நகை அல்லது டிஜிட்டல் தங்கம் உகந்தது அல்ல என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க
தங்க பத்திர முதலீடு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!
வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிப்பு: மூன்று ஜாக்பாட்!