திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறுமலை பழையூர், பொன்னுருவி, புதூர், தென்மலை அகஸ்தியர்புரம், குரங்குபள்ளம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் மிளகு பயிரட பட்டுள்ளன. இங்கு விளையும் மிளகின் காரத் தன்மை தனித்துவமானது என்பதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 250 எக்டேர் பரப்பளவில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது. மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சமவெளிப் பகுதிகளில் நவம்பர் முதல் ஜனவரி வரைக்கும், மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரைக்கும் அறுவடைக்காலம் இருக்கும். கொடியில் இருக்கும் ஒன்றிரண்டு மணிகள் பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பாக மாறும் போது அறுவடை தொடங்குவார்கள். அறுவடை செய்த மிளகை வெய்யிலில் 7-10 நாட்கள் வரை நன்கு காய வைக்க வேண்டும். தற்போது உலர்த்திய மிளகை வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டியில் இருந்து பிற மாவட்டம், மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
கரோனா பாதிப்பால், மிளகு ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் வரை கிலோ ரூ.340க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.292 ஆக விலை சரிந்துள்ளது. இம்முறை பூச்சித் தாக்குதல், வாடல் நோய் அதிகம் இல்லாததால் சாகுபடி அதிகரித்துள்ளது. எனினும் விலை சரிவு கவலை அளிப்பதாகவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது தடைப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.