நவீன தேனீ வளர்த்தலின் தந்தையாக கருதப்படும் ஆண்டன் ஜான்சாவின் பிறந்தநாளை முன்னிட்டும் மற்றும் தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் உலக தேனீக்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அறிமுகம்:
ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி, உலக தேனீக்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் தேனீக்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் அவற்றினை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அனைவரும் உணர வேண்டும் என்பதே தேனீக்கள் தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
இயற்கையின் சின்னஞ்சிறு ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் தேனீக்கள், நாம் சுவைக்கு இனிமையான தேனுக்கு மட்டுமல்ல, உலகின் பயிர்களில் குறிப்பிடத்தக்க அயல் மகரந்தச் சேர்க்கை செய்வதற்கும் உதவி வருகிறது.
தேனீக்களின் முக்கியத்துவம்:
தேனீக்கள் வெறும் சலசலக்கும் பூச்சிகள் அல்ல; அவை நமது உணவாக விளங்கும் பல பழங்கள், காய்கறிகள் உட்பட பூக்கும் தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதன் உண்ணுகிற உணவில் 75 சதவீதத்திற்கு மேல் தேனீக்களின் அயல் மகரந்த சேர்க்கை மூலம் உண்டாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேனீக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்:
தேனீக்கள் பல சவால்களை தற்போது எதிர்கொள்கின்றன. நகரமயமாக்கல், தீவிர விவசாயம் (non-organic) மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன. காலநிலை மாற்றமும் தேனீக்களின் வாழ்விடங்களை சீர்குலைக்கிறது. கூடுதலாக, வர்ரோவா போன்ற பூச்சிகள் மற்றும் நோய்களின் பரவல், தேனீக் கூட்டங்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. இது போன்ற காரணங்களால் உலகளவில் தேனீக்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
உலக தேனீ தினம் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
2017 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை, தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், தேனீக்கள் போன்ற உயிரினங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் மே 20 ஆம் தேதியை உலக தேனீ தினமாக அறிவித்தது.
தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, ஒன்றிய அரசு "தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம்" என்ற திட்டமானது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தேனீ வளர்ப்பு என்பது ஒரு முக்கியமான வேளாண் வணிகச் செயலாகும். இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு வழிவகுக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நடவடிக்கைகள் தாண்டி தேனீ பாதுக்கப்பில் அனைவருக்கும் முக்கிய பங்கு. தேனீக்களை கவரும் பூக்களை நடுதல் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த தோட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அனைவரும் எடுக்கக்கூடிய எளிய செயல்முறையாகும். பூச்சிக்கொல்லி பயன்பாட்டைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது தேனீ போன்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை நீட்டிக்க செய்யும்.
உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களை ஆதரிப்பது மற்றும் அவர்களது வளர்ப்பிலிருந்து தேன் தொடர்பான பொருட்களை பெற்று உட்கொள்வது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், தேனீக்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும் உதவும்.
pic courtesy: unsplash
மேலும் காண்க: