ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சைக்கிள், பல விதமான நினைவுகளை உண்டாக்கி இருக்கும். சிறுவயதில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலான விபத்துக்கள் சைக்கிளில் சென்று ஏற்பட்டதாகவே இருக்கும். சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது வரை, ஒற்றைக்கை விட்டு ஓட்டுதல், இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுதல், குரங்கு பெடல் என்னும் முறையில் ஓட்டுதல் என சைக்கிள் பற்றிய நமது நினைவுகள் ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு நமது மனதில் விரவிக்கிடக்கின்றது.
சைக்கிள் (Cycle)
பெரும்பாலான வீடுகளில் தந்தை ஓட்டிச்செல்வதற்காக என்று ஒரு பெரிய சைக்கிள் மட்டுமே இருக்கும். சிறு பிள்ளைகளை இருக்கும் நமக்கு அந்த சைக்கிள்கள் ஒரு எட்டாக்கனியாக மட்டுமே தெரியும். இந்த எட்டாக்கனியினை, எட்டும் கனியாக மாற்றிய பெருமை ஒவ்வொரு தெருக்களில் இருக்கும் சைக்கிள் கடைக்காரர் என்னும் தெய்வத்தினையே சேரும்.
அட ஆமாங்க.. தினமும் நமக்கு கிடைக்கின்ற ஒன்று இரண்டு ரூபாய்களை சேர்த்து வைத்து எப்போ விடுமுறை வரும் என்று காத்திருந்து, வாரத்தின் இறுதி நாள் விடியும் முன்பே, கடைக்காரர் கடையினைத் திறக்கும் முன்பே.. முதல் ஆளாக அந்த கடைக்கு முன்பு நாம் இருப்போம்.
உலக சைக்கிள் தினம் (World Cycle Day)
இன்று உலக சைக்கிள் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வண்ண வண்ண நிறத்தில் நமக்கு ஏற்ற உயரத்தில் இருக்கும் சைக்கிளினை எடுத்து ஓட்டுவதற்கு அந்த சைக்கிள் கடைக்கார தெய்வம் நம்மிடம் கேட்கும் தொகை ஐந்து ரூபாய்க்குள் தான் இருக்கும். ஆனால், அந்த ஐந்து ருபாய் நமது சிறுவயது காலத்தில் பெரிய தொகைதான் என்றாலும், நமது கனவான சைக்கிளினைத் தொட்டு ஒரு மணி நேரம் பயணம் செய்யும் சுகத்தின் முன்பு மிகச் சிறியது தான்.
இந்த வாடகை சைக்கிளினை வாங்குவதற்கு விடுமுறை தினத்தில் பெரிய சண்டையே நடக்கும். வயதில் நம்மைவிட பெரியவர்கள் நமக்கு மிகப் பிடித்த சைக்கிளினை எடுத்துச் செல்லும் போது வரும் அழுகை கலந்த ஆத்திரமெல்லாம் நீங்காத நினைவுகளாய் இன்றும் நம் மனதில் பதிந்திருக்கும்.
இப்படி நமக்கு விவரம் தெரியாத காலத்திலிருந்தே ஒரு நண்பனாய், நமது பயணத்தின் ஒரு அங்கமாய், ஒரு கனவாய், ஒரு பேராசையாய் சைக்கிள் இருந்துள்ளது.
காலங்கள் கடந்து நமக்கு வயதாகிய போதும் சைக்கிளைனைப் பார்க்கும் போதும், அதனை ஓட்டும் போதும் வரும் குதூகலமும், மன நிம்மதியும், அதனால் தோன்றும் கடையோரத்து சிறு புன்னகையும் விலைமதிப்பில்லாத ஒன்று.
மேலும் படிக்க