தமிழக அரசு பயறுவகை சாகுபடியை ஊக்குவித்து பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்தும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும். தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு (2022-2023) ராபிப் பருவத்தில் பச்சைபயறு தனிப்பயிராக 9250 எக்டேர் பரப்பிலும். நெல் தரிசில் பயறுவகை சாகுபடி திட்டத்தின் கீழ் 850 எக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 10000 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையிலுள்ளது.
கடந்த ஆண்டு (MSP) குறைந்தபட்ச விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஒரு ஹெக்டருக்கு 257 கிலோ வீதம் 675.65 மெட்ரிக் டன் பச்சைபயறு கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் பச்சைபயறு சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAQ) ஆல் நிர்ணயிக்கப்பட்ட தரகுறியீட்டின் படி, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ.77.55 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான “தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED)” மூலம் விவசாயிகளிடமிருந்து பச்சைபயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரிடமும் விடுபாடின்றி கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் எடுத்த துரித முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக 900 மெ.டன் கொள்முதல் செய்யவும். ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ பச்சைப்பயறு வீதம் 1200 மெ.டன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஆணை வரப்பெற்றுள்ளது. விவசாயிகளின் பச்சைப்பயறு கொள்முதலுக்கான தொகை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மே 29, 2023க்குள் தங்களின் ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம். நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் திருவள்ளூர் செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க இத்திட்டத்தில் விவசாயிகள் முழுமையாக பங்குபெற்று பயன்பெறுமாறும், கூடுதல் விவரங்களுக்கு செயலாளர் காஞ்சிபுரம் விற்பனைக்குழு, மேற்பார்வையாளர்கள் திருவள்ளுர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஆகியோரை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
நெல்லுக்கான தமிழ்நாடு அரசு MSP அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி
MSP விலைக்கும் அதிக விலையில் துவரம் பருப்பு, ஆனால் விவசாயிகள் மறுப்பு