நடப்பாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு, வாழை, வெண்டை பயிர்களை பயிர்க்காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் 1.5 - 5% வரை மட்டும் பிரிமீயம் தொகை செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள கட்டணத்தில் 80 % மாநில அரசும், 20 % ஒன்றிய அரசாலும் செலுத்தப்படும் என நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்தில் உள்ளது.
நெல் சிறப்பு பருவம் -2 காப்பீடு செய்ய 15.12.2023 கடைசி நாளாகும். உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு 15.11.2023 கடைசி நாளாகும். நெல் மூன்றாம் பருவத்திற்கு 31.01.2024 கடைசி நாளாகும். மக்காச்சோளம் -3 பதிவு செய்ய 30.12.2023 கடைசி நாளாகும். மேலும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை 29.02.2024 மற்றும் வெண்டைக்கு 15.02.2024 பதிவு செய்ய கடைசி நாளாகும்.
காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். காப்பீட்டு கட்டணத்தில் வேளாண் பயிர்களுக்கு 1.5 சதவீதம் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவீதம் மட்டும் விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டும். மீதமுள்ள தொகையில் மாநில அரசு 80 சதவீதமும், ஒன்றிய அரசு 20 சதவீத தொகையையும் செலுத்தி விடும்.
நடப்பாண்டில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.490/- மக்காச்சோளப் பயிருக்கு ரூ.326/-, உளுந்து பயிருக்கு ரூ.210/-, பாசிப்பயருக்கு ரூ.208/- வெண்டைக்கு ரூ.785/- மற்றும் வாழைக்கு ரூ.3,600/- விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர் காப்பீடு கட்டணமாகும்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பொழுது பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பதிவு செய்யும் பரப்புக்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். பதிவு செய்த பின் பெறப்படும் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் இரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் அனைவரும் இறுதிநாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் காண்க:
பயிர் காப்பீடு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அலர்ட்
பூவன்- கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பு