பிஎம் கிசான் பயனாளிகள் 13ஆவது தவணை தொகையினை பெறுவதற்கு eKYC கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம்
பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டமாகும். பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்,மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
13ஆவது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 13ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஒருவேளை நீங்களும் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்த வேலையைச் செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
ஆதார் முக்கியம்
நடப்பாண்டில், 13வது தவணையாக, அதாவது 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பிஎம்கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது. எனவே நீங்களும் ஆதாரை உறுதி செய்தால் மட்டுமே இந்த உதவியைப் பெறமுடியும்.
ஆதார் எண்
பயனாளிகள் பொதுச் சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம்.ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password) பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொதுச் சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
மற்றொரு முறை
உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். பிஎம் கிசான் தவணைத் தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் ஆதார் எண்ணை உறுதி செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சரியான விவரங்கள்
பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவி எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து வரவேண்டுமானால் பயனாளியின் பெயர், மற்ற விவரங்கள், ஆதார் எண், மொபைல் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தும் சரியானதாகவும் அப்டேடாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவி வருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!