மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 January, 2023 2:35 PM IST
2022-23: Subsidy of Rs.400/- per acre for cultivation of pulses in Samba paddy fields

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயறுவகைப்பயிர்களின் சாகுபடியினை உயர்த்துவதற்காக, மாநில அரசு தரமான பயறு விதை விநியோகம், பயறு விதை உற்பத்தி மானியம், தொழில்நுட்பச் செயல்விளக்கம், மானாவாரியில் உளுந்து, வரப்பில் உளுந்து, தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி போன்று பல்வேறு வகைகளில் பயறு வகைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக, ரூ.101 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நெல் அறுவடைக்குப்பின் நஞ்சை தரிசில் செய்வதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேளாண் மானியக் கோரிக்கை அறிவிப்பு

மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள், 2022-23 ஆம் ஆண்டின் வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் "சம்பா நெல் அறுவடைக்குப்பின், உளுந்து, பச்சைப்பயறு 10 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திட ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் வழங்குவதற்காக, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பயறு உற்பத்தி 2 இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என்பதுடன், 12 இலட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்" என்று அறிவித்தார்கள்.

திட்டத்தின் நோக்கம்

நெல் அறுவடைக்குப்பின் மண்ணில் எஞ்சியுள்ள ஈரத்தை திறம்பட பயன்படுத்தி உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும். நஞ்சைத்தரிசில் பயறு சாகுபடி நெடுங்காலமாக விவசாயிகள் மேற்கொண்டு வந்தாலும், பல்வேறு காரணங்களினால் இப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நஞ்சைத்தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, 50 சதவிகித மானியத்தில் பயறு விதைகளை வழங்கிடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நஞ்சைத் தரிசில் பயறு சாகுபடிக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள்

1. சம்பா நெல் அறுவடைக்குப் பின், 10 இலட்சம் ஏக்கரில் பயறு வகைகளை சாகுபடி செய்வதற்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதற்காக, 2022 ஆம் ஆண்டு காரீப் பருவத்திலேயே 11,731 எக்டரில் உயர்மகசூல் இரகங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, போதுமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2. ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 10 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான விதைகளை 50 சதவிகித மானியத்தில் அதாவது ஏக்கருக்கு ரூ. 400/- வீதம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக, முதல்கட்டமாக, அரசு ரூ. 17 கோடிக்கு அரசாணை வழங்கியுள்ளது. மீதமுள்ள நிதியினையும் விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

3. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.12.2022 அன்று துவங்கி வைக்கப்பட்டு, இதுவரை 389 மெ.டன் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

4. சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள கிராமங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல், பல்வேறு பயிற்சிகளும், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன. மேலும், துண்டுபிரசுரங்கள், விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள், கையேடுகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் குறும்படங்கள் வாயிலாகவும் நஞ்சைத்தரிசில் பயறு சாகுபடியின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

5. உற்பத்தி செய்யப்படும் பயறு வகைகளை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையான உளுந்து கிலோவுக்கு ரூ.66/-, பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.77.55/- விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை
எடுத்து வருகிறது.

திட்டப்பலனை எவ்வாறு பெறுவது?

சம்பா, தாளடி நெல் சாகுபடி காவேரி டெல்டா மாவட்டங்களில் 13.53 இலட்சம் ஏக்கரிலும், இதர மாவட்டங்களில் 22.75 இலட்சம் ஏக்கரிலும், ஆக மொத்தம் 36.28 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 2.62 இலட்சம் ஏக்கரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பரப்பில் விரைவில் அறுவடை துவங்கும். நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகலாம்.

எனவே, தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்து வரும் விவசாயிகள், நெல் அறுவடைக்குப்பின், குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டுவதற்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் நெல் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயனடையுமாறு மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதன்மூலம் உங்கள் மண் வளம் மேம்படும் என்பதுடன், மாநிலத்தின் பயறு உற்பத்தியும் உயரும்.

மேலும் படிக்க:

கால்நடைகளின் பாதுகாப்பு: மாணவியின் சிந்தனைக்கு பாராட்டு

Intelligence Bureau ஆட்சேர்ப்பு 2023 – 1675 காலிபணியிடங்கள், இப்போதே விண்ணப்பிக்கலாம்

English Summary: 2022-23: Subsidy of Rs.400/- per acre for cultivation of pulses in Samba paddy fields
Published on: 27 January 2023, 02:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now