விவசாயிகள் உற்பத்தி செய்த தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் தாா்ப்பாய்களுக்கு 50 சதவீத மானியம் விரைவில் வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சம்பா சாகுபடி (Samba cultivation)
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல்லுக்கான பயிா்க் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4,316 விவசாயிகள் 10,185 ஏக்கரில் பயிா் காப்பீட்டுக்கான தொகையை செலுத்தியுள்ளனா்.
காப்பீடு காலக்கெடு
நவ.15-க்குள் சம்பா நெல் பயிா் காப்பீடுதொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும். ஓா் ஏக்கருக்கு ரூ.442 செலுத்த வேண்டும். தற்போது சம்பா நடவுப்பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்தில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஹெக்டோ் வரை நடவு மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இந்த மாதத்தில் விநியோகம் செய்ய வேண்டிய யூரியாஅளவு 4,075 டன். இதுவரை 3,500 மெ. டன் யூரியா மட்டுமே பெறப்பட்டு தனியாா் உரக்கடைகள், கூட்டுறவு பணிமையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நெல் ரகங்கள் (Paddy varieties)
விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் குறைந்த வயது நெல், மத்திய கால ரகங்கள் ஆகியவை சுமாா் 422 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் அனைத்து விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விதைகள் கையிருப்பு (Seeds stock)
அதேபோல, சிறுதானிய விதைகள் 1.5 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது.
மணிலா 12 மெ. டன் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. ராபி பருவத்துக்கு பயறு வகை விதைகள், உளுந்து சுமாா் 140 மெ. டன் அனைத்து விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் பெற்று விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
தார்ப்பாய்கள் (Tarpaulins in subsidy)
பருவமழையைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவும் வகையிலும், மழையில் நனையாமல் இருக்கவும், விழுப்புரம் மாவட்டத்துக்கு 50 சதவீத மானியவிலையில் 795 தாா்ப்பாய்கள் வழங்க இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2,500
50 சதவீத மானியமாக தாா்ப்பாய் ஒன்று ரூ.2,500-க்கு வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் தாா்ப்பாய் வழங்கப்படும். சிறு விவசாயிகள், ஆதி திராவிட விவசாயிகள் குறைந்த நிலம் உடையவா்களாக உள்ளனா். அவா்களுக்கு விவசாயப் பணிக்கு தேவையான வேளாண் கருவிகள் அடங்கிய பெட்டகம் 90 சதமானிய விலையில் வழங்கவும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத மானியமாக ஒரு பெட்டகம் ரூ.2,700-க்கும், 75 சதவீத மானியமாக ஒரு பெட்டகம் ரூ.2,250-க்கும் வழங்கப்படும். அந்த பெட்டகத்தில் மண்வெட்டி,
கடப்பாரை, களைக்கொத்தி, வாணல் சட்டி, அரிவாள் ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும். இவ்வவாறு ஆட்சியா் மோகன் தெரிவித்தார்.
மேலும் படிக்க...