Farm Info

Saturday, 22 October 2022 10:34 AM , by: Elavarse Sivakumar

கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்குவதற்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு நிறைய நவீன இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தாலும், அன்றாட சாகுபடிப் பணிகளில் கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகள் விவசாயிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய வேளாண் கருவிகளை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் செலவு குறையும் என்பதுடன், அவர்களின் சாகுபடிப் பணியும் எளிதாகிறது.

வேளாண் நிதிநிலை

வேளாண் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடும் வகையில், "வேளாண் கருவிகள் தொகுப்பு", 2022-23 ஆண்டிலும் ஒரு லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும் என 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

என்னென்ன கருவிகள்?

கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிர்அறுவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய "வேளாண் கருவிகள் தொகுப்பு" ஒரு இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக தமிழ்நாடு அரசு மாநில நிதியிலிருந்து ரூ.15 கோடி நிதியினை ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது.

மானியம் எவ்வளவு?

ரூ.3,000/-மதிப்புள்ள வேளாண் கருவிகள் தொகுப்பு 50 சதவிகித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1,500/-க்கு வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கார்டில் உள்ள விபரப்படி, ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு வேளாண் கருவித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.

முன்னுரிமை

சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் அட்டை வைத்துள்ள வேளாண் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். கிராமங்களில் உள்ள விதவைப்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தினருக்கும் முக்கியத்துவம் தரப்படும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேளாண் கருவித் தொகுப்பை மானியத்தில் வாங்குவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாக தேவையான தகவல்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இணையதளம் மூலமாக, தேவையான தகவல்களை ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்தும், முன்பதிவும் செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)