பொள்ளாச்சியில் விளைநிலத்தில், போர்வெல் அமைக்க, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், 50 சதவீதம் மானியம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, புதிய போர்வெல் அமைக்க, 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன், அதற்கு, 50 சதவீதம் அரசு மானியமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, சிறு, குறு விவசாயி சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி பட்டா, அடங்கல் நகல், ஜாதி, வருமானம், இருப்பிட சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள விவசாயிகள், கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோார் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருமானம் இல்லாத விவசாயிகளுக்கு பயனளிக்கும். அதனால், விண்ணப்பித்து பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வாழைக்கு மானியம் (Subsidy for banana)
இதேபோல், மேட்டுப்பாளையம் மேல் பவானி கிளை வாய்க்கால் ஆற்றுப்பாசனம் பெறும் கிராமங்களில், வாழை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.வாழை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக, நிலவள, நீர்வள மேம்பாட்டு திட்டத்தில், தோட்டக்கலைத்துறை வழங்குகிறது.இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, 98941 63887, 94888 36480 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காரமடை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தவிர்க்க மானியம் - நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!