ஒரு காலத்தில் Minor Pest ஆக இருந்த மாவுப்பூச்சி தற்போது Major Pest ஆக மாறி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இதனுடைய தாக்கம் அதிகமாக வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ஆகும்.
குறிப்பாக உலக வெப்ப மயமாதலினால் இப்பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றன என குறிப்பிட்ட வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன், மாவுப்பூச்சியின் தன்மை குறித்தும் அவற்றினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மாவுப்பூச்சி- சிறு விளக்கம்:
மாவுப்பூச்சியானது (MEALY BUG) பஞ்சு போன்ற வெண்மை நிறமுடைய சிறிய மிருதுவான சாறு உறிஞ்சும் பூச்சிகளாகும். இது ஒரு அந்நிய பூச்சியான வெளிநாட்டு வரவு. இது சூடோ காக்ஸிடே குடும்பத்தை சார்ந்தது. மாவு பூச்சிகள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் 3-5 மி.மீ அளவில் காணப்படுகின்றன.
இப்பூச்சிகளின் உடலில் மென்மையான மெழுகு படிவங்கள் மூடியிருப்பதால், இவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகிறது. மாவுப்பூச்சிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி கொண்டு செல்லுவது எறும்புகளே. எறும்புகளின் நடமாட்டத்தை தடுத்தாலே மாவு பூச்சியின் பாதிப்பை பாதிக்குறைக்கலாம்.
எந்தெந்த பயிரை தாக்கும்?
இப்பூச்சிகள் கிட்டத்தட்ட 200 வகையான தாவரங்களை தாக்கும். குறிப்பாக பருத்தி, பயறுவகைகள், வெண்டை, கத்திரி, மிளகாய், பப்பாளி, செம்பருத்தி, கொய்யா, மற்றும் குரோட்டன்ஸ் ஆகிய தாவரங்களை தாக்குகின்றன. இப்பூச்சிகள் கூட்ட கூட்டமாக இலைகள், தண்டுகள், மற்றும் வேர் பகுதிகளில் தாக்கும். மாவுப் பூச்சிகள் திசுக்களை உண்டு எச்சிலை செடியினுள் செலுத்துவதால் இலைகள் சுரங்கி முரனணயாகின்றன. இதனால் இளஞ்செடிகள் வாடி காய்ந்து மடிந்து விடும்.
எப்படி கட்டுப்படுத்தலாம்?
- மாவுப்பூச்சிகளை பரப்புவதிலும் அவற்றை பாதுகாக்கும் எறும்புகளின் எண்ணிக்கையினை ஓட்டு மொத்தமாக கட்டுப்படுத்திட வேண்டும்.
- களைச்செடிகளை அகற்றிட வேண்டும்.
- எறும்பு புற்றுக்களை அழிக்க வேண்டும். இவற்றை அழிக்க குளோரி பைரிபாஸ் 20 இ.சி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரிக்கு 2.5மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
- மாவுப்பூச்சிகளின் மீது சோப்பு கரைசல் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும்.
- இளம் பூச்சிகளை கட்டுப்படுத்த மீன் எண்ணெய் சோப்பு 2.5% என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
- உயிரியல் கட்டுப்பாடாக ஆஸ்ட்ரேலிய பொறி வண்டு- கிரிப்டோலிம்ஸ் மாண்ட் ரோசோரி வண்டுகள் 300/ஹெக்டேர் இடலாம்.
- பாதிப்பு அதிகமாக இருக்கும் போது புரபனோபாஸ்/ அசிபேட் 75 SP, இவைகளில் ஏதாவது ஒன்றை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
மகசூல் இழப்புக்கு காரணமாக திகழும் மாவுப்பூச்சியினை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் முரண்கள் இருப்பின் அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண்மை ஆலோசகர் அக்ரி சு.சந்திரச்சேகரன் அவர்களை தொடர்புக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289
Read more:
மின்கம்பம் அருகே நாற்றங்கால் தேர்வு செய்தால் ஆபத்தா? உழவியல் முறையில் IPM!
ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!