நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் (Agricultural afforestation project) இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் கூறினார்.
வேளாண் காடு வளர்ப்பு திட்டம் (Agricultural afforestation project)
கீழ்வேளூர் வட்டாரத்தில் விவசாயிகள் புதிய வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் வேம்பு, தேக்கு, மலைவேம்பு, ரோஸ் வுட், ஈட்டி, மகாகனி போன்ற மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை பெறுவதற்கு உழவன் செயலியில் (Uzhavan App) விவசாயிகளே பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகள் பதிவு செய்தபின் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு உதவி வேளாண்மை அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில் வனத்துறையின் மூலம் மரக்கன்றுகளை பெற்று கொள்ளலாம்.
மரக்கன்றுகள் (Saplings)
வரப்புகளில் நடவு செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், நிலங்களில் தனியாக நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம், வேலைவாய்ப்பு கிடைக்க செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும் பசுமையான சூழலை உருவாக்கிடவும் வழிவகை செய்யப்படுகிறது.
மரக்கன்றுகளை பராமரிக்க ஊக்கத்தொகையாக 2-வது ஆண்டில் இருந்து உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு 3 ஆண்டுகள் வரை மரக்கன்றுக்கு ரூ.7 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறை மூலம் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் விவசாயிகள், மகளிர் விவசாயிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயன் பெறலாம்
விருப்பமுள்ள கீழ்வேளூர் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு வேளாண்காடுகள் திட்டத்தில் பங்கு பெற்று பயன்பெறலாம்.
மேலும் படிக்க
உலகிலேயே அதிக மதிப்புமிக்க மரம்: ஒரு கிலோ ரூ.75 லட்சம்!
மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!