விவசாயிகளுக்கு மானிய விலையில், விவசாய உபகரணங்களை அளித்து வருகிறது அரசு. இந்நிலையில், இம்மாதிரியான செய்திகள் விவசாயிகளை சென்றடையாமல் இருப்பது தான் கவலையளிக்கிறது. அவ்வகையில், 50% மானியத்தில் விவசாய உபகரணங்களை வாங்க விவசாயிகள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50% மானியம் (50% Subsidy)
தமிழ்நாடு அரசு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, காங்கயம் வட்டார வேளாண்மை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நத்தக்காடையூர், பழையகோட்டை, பரஞ்சேர்வழி ஆகிய 3 கிராம ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்து, கதிர் அரிவாள், காரை சட்டி ஆகிய வேளாண் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் விசை தெளிப்பான், தார்ப்பாய் உட்பட விவசாய பணிகளுக்கு தேவையான பண்ணை கருவிகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
ஆகவே நத்தக்காடையூர் பகுதி ஊராட்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவதற்கு இப்பகுதி விவசாயிகள் கணினி சிட்டா, ஆதார் நகல், வங்கி புத்தக நகல், குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நத்தக்காடையூர் உதவி வேளாண்மை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க