75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு திட்டக்குறியீடாக 30 எண்ணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி
-
இத்திட்டத்தின் கீழ் பலனடைய குறைந்தபட்சம் 2 மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
-
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் குழுவாக பயன் பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக, மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
-
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
-
பயனாளி கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இதை போன்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குள் பயனடைந்தவராக இருக்கக்கூடாது.
-
தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் ரூ.4919/- (25% ஜிஎஸ்டி சேர்த்து) பங்குத் தொகையைச் செலுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
-
30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
-
அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிய பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...