தமிழகத்தை பொறுத்தவரை ,காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்பு நெல் தரிசு வயல்களில் பயறு வகைகளை சாகுபடி செய்து நிலத்தை வளப்படுத்துவதுடன், வருவாயையும் ஈட்டலாம். நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைபயறு சாகுபடி செய்து பயன் பெறுமாறு திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
சம்பா மற்றும் தாளடி வயல்களில் அறுவடைக்கு பின், எஞ்சியுள்ள ஈரம், ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி, பனி ஈரத்தைக் கொண்டும் உளுந்து, பச்சைப் பயறு ஆகியவை சாகுபடி செய்வதன் மூலம் மண் வளத்தை பெருக்க முடியும். விவசாயிகள் ஆடுதுறை 3 உளுந்து ரகத்தையும், ஆடு துறை 3 பச்சை பயறு ரகத்தையும் சாகுபடி செய்யலாம் என பரிந்துரைத்தார்.
விதை நேர்த்தி
விதைப்பதற்கு முன்பு சரியான விதை நேர்த்தி மிக அவசியமாகும். நிறம், பருமன் இவற்றில் வேறுபாடு இருப்பின் அவற்றை தவிர்த்து, தரமான மற்றும் ஒரே மாதிரியான விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். உயர் விளைச்சலுக்கு தைப்பட்டம் மிகவும் சிறந்தது என்பதால் தை முதல் 15 க்குள் விதைக்க வேண்டும். விதைப்பு தள்ளிப்போகும்போது மண்ணின் ஈரப்பதம் குறைவதுடன், வறட்சிக்கு உள்ளாகி விளைச்சல் மிகவும் பாதிக்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ முதல் 10 கிலோ வரை விதைக்கலாம். விதையுடன் ரைசோபியம் (200 கிராம்), பாஸ்போபாக்டீரியா (200 கிராம்), சூடோமோனாஸ் (100 கிராம்) ஆகிய நுண்ணுயிர் கலவையை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்ய வேண்டும். பயிறு வகைகள் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் 35 மற்றும் 45வது நாளில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்து அதிக மகசூல் பெறலாம்.
நுண்ணுயிர் கலவையை பயன்படுத்துவதன் மூலம் காற்றில் கலந்துள்ள தழைசத்தை வேர் முடிச்சுகள் நிலத்தில் நிலை நிறுத்தி மண் வளத்தை கூட்டுகிறது. விவசாயிகளுக்கு தேவையான நுண்னுயிர் கலவை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கிறது என் தெரிவித்தார்.