Farm Info

Sunday, 08 November 2020 03:10 PM , by: Daisy Rose Mary

Credit : Hans India

ஈரோடு பகுதிகளில் தட்பவெப்பநிலை காரணமாக நெற்பயிரில் பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்பட்டு மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்தாக்குதலை கட்டுப்படுத்த தழைச்சத்து உரங்களை அளவாக இட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தைச் சுற்றியுள்ள நம்பியூர் வட்டாரம், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு பயிர் நடவு முதல் அதிகபட்ச தூர்கட்டும் பருவம் வரை பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

நோய் தாக்குதல்

அண்மைக் காலமாக நெற்பயிரில் குலைநோய், இலையுறை அழுகல், இலையுறை கருகல், பூ விழுதல், பாக்டீரியல் இலைக்கருகல், பாக்டீரியல் இலைக்கோடு போன்ற நோய்களாலும், இலை சுருட்டுப்புழு , குருத்துப்புழு, புகையான் போன்ற பூச்சிகளாலும் தாக்கப்பட்டு மகசூல் குறைவு ஏற்படுகிறது.

உரம் பயன்பாடு அதிகரிப்பு

இதற்கு முக்கிய காரணங்களாக பருவநிலை மற்றும் தட்பவெப்பநிலை, அதிகமாக நோய்களினால் பாதிப்புக்குள்ளாகும் டீலக்ஸ் பொன்னி அரிசி போன்ற இரகங்களை சாகுபடி செய்வது போன்றவை இருந்தாலும், பரிந்துரையைவிட அதிகமாக தழைச்சத்து உரங்களான யூரியா மற்றும் அம்மோனியம் சல்பேட் உரங்களை நெற்பயிருக்கு இடுவது முக்கிய காரணமாக உள்ளது.

மண்பரிசோதனை அடிப்படையில் உரம்

மேற்கூறப்பட்ட நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் நெற்பயிர் வளர்ச்சி அதிகமாக உள்ள வயல்களிலும், ஒரே வயலில்கூட வளர்ச்சி அதிகமாக உள்ள இடங்களில் அதிகமாக இருப்பதையும் விவசாயிகள் கவனித்திருக்கலாம். அதுமட்டுமின்றி தழைச்சத்து அதிகமாக இடப்படும் வயல்களில் உள்ள பயிர்கள் உயரமாக வளர்ந்து காற்றாலும், மழையாலும் சாய்ந்து மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதனடிப்படையில் பயிர்களுக்கு உரமிடுவது மிகவும் நல்லது.

உர அளவீடு

மண் பரிசோதனை செய்யப்படாத வயல்களில் முதல் மேலுரமாக ஏக்கருக்கு 20 கிலோ யூரியா மற்றும் 10 கிலோ பொட்டாஷ் உரம் மட்டுமே இடவேண்டும். இரண்டாவது மேலுரமாக 20 கிலோ யூரியா மற்றும் 10 கிலோ பொட்டாஷ் உரத்தை இட வேண்டும். அடியுரமாக பொட்டாஷ் உரம் இடப்படாத வயல்களில் ஒவ்வொரு முறையும் 15 கிலோ பொட்டாஷ் உரத்தை இட வேண்டும். இதற்கு அதிகமாக யூரியா உரத்தை இடும்போது மேற்கூரியவாறு பயிரின் தழை வளர்ச்சி அதிகரிப்பதால், நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிர் சாய்வதாலும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. முதலாவது மற்றும் இரண்டாவது மேலுரம் இடும்பொழுது இலைவண்ண அட்டையை (Leaf Colour Chart) உபயோகித்து தேவைப்பட்டால் மட்டுமே யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை இடுவதும், பயிர் கரும்பச்சை நிறத்தில் அதிகமாக வளர்ந்திருந்தால் யூரியாவை இடாமல் இருப்பதும் சாலச்சிறந்தது.

அதிக மகசூலுக்கான ஏற்பாடு

யூரியா உரத்தை இடும்பொழுது 5கிலோ யூரியாவிற்கு கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் பொட்டாஷ் உரத்தை கலந்து இலைகளில் உள்ள பனித்தண்ணீர் நீங்கிய பிறகு பயிருக்கு இடுவதன் மூலம் யூரியா விரைவாகக் கரைந்து பயிருக்கு உடனடியாகக் கிடைப்பதைத் தவிர்த்து சிறிது சிறிதாக பயிருக்குக் கிடைக்கச் செய்வதன் வாயிலாக பயிர் அளவாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கச் செய்யலாம். மேலுரத்தை இரண்டு தவணைகளாக இடுவதற்குப் பதிலாக ஏக்கருக்கு 13கிலோ யூரியா என்ற அளவில் முதல் களை இரண்டாம் களை மற்றும் தேவைப்படின் பஞ்சுக் கூட்டுப் பருவத்தில் ஒரு முறை என மூன்று தவணைகளாகப் பிரித்து இடுவதும் சிறந்த முறையாகும்.

எனவே, விவசாயிகள் நெற்பயிருக்கு தழைச்சத்து உரங்களை அளவாக இட்டு பயிரை பூச்சி நோய் தாக்குதலில் இருந்து காக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே அதிக மகசூல் எடுக்கலாம் என ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

வருவாயை இரட்டிப்பாக்கலாம் வாங்க - கால்நடை வளர்போருக்கான ஆலோசனைகள்!!

வேளாண் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!!

வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)