Farm Info

Monday, 06 September 2021 11:28 AM , by: Elavarse Sivakumar

வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

9 மாதப் போராட்டம் (9 months of struggle)

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுக் கடந்த 9 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விவசாயிகள் மாநாடு (Farmers Conference)

இதற்கிடையே, 40 விவசாய சங்கங்கள் இணைந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இம்மாநாடு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த விவசாயிகள் பேருந்துகள், கார்கள் மற்றும் டிராக்டர்களில் வந்து சேர்ந்தனர். கையில் தங்களது கொடி, தலையில் பல வண்ண தொப்பியுடன் பெண்கள் உள்பட ஏராளமானோர் வந்தனர். இதன் காரணமாக மாநாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலைகள் முழுவதும் அவர்களது வாகனங்களால் சூழப்பட்டிருந்தன.

சமூக சேவகி மேதா பட்கர், விவசாய தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற மாநாட்டு மேடையில் , பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், பேசியதாவது:-

நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும், வர்த்தகம், தொழிலாளர்கள், இளைஞர்கள் காக்கப்பட வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். இதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விமர்சனம் (Review)

தொடர்ந்து இந்த விவசாயிகள் மாநாட்டில் பேசியவர்கள், மோடி அரசையும், யோகி ஆதித்யநாத் அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினர். முழக்கங்களும் எழுப்பப்பட்டன. வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். முதலில், 25-ந் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின்னர், 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. மாநாட்டையொட்டி, 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களுக்காக 500 உணவு கடைகளும், நடமாடும் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரம் மருத்துவ குழுக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பலத்தப் பாதுகாப்பு (Heavy security)

மாநாட்டுக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களை விவசாய சங்கங்கள் நியமித்து இருந்தன. இந்த மாநாடு, மோடி அரசுக்கும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் விவசாயிகளின் பலத்தை உணர்த்தி இருப்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

இனி உங்களுக்கு ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்- அரசின் விதிகளில் மாற்றம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)