விவசாயிகளைப் பொருத்தவரை, சாகுபடி செய்து விளைவிப்பது முதல் படி என்றால், மண்டி,ஏஜெண்ட் கமிஷன் போன்றவற்றையெல்லாம் கடந்து, விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பது என்பது சவால் மிகுந்த பணி.
ஆனால், விளைபொருட்களை சந்தை விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு வாங்கிக்கொண்டு, விற்கும் சுமையில் இருந்து விவசாயிகளை காப்பதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது நபார்டு நிதியின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், வேளாண் அறிவியல் மையம் மற்றும் நபார்டு நிதி உதவியோடு தொடங்கப்பட்டுள்ளது ஆரமுது உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
நோக்கம் (Target)
இந்த வட்டாரத்தில் உள்ள உழவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே நோக்கம்.
ரூ.1000 சந்தா
மருதநாடு சாலையில் ஸ்ரீபாரதி வேளாண் பண்ணையில் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் அனைத்து விவசாயிகளும் உறுப்பினர் ஆகலாம். ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்திவிட்டு, ஆயுள் கால உறுப்பினராகிவிடலாம்.
உறுப்பினர்களுக்கு சலுகைகள்
-
500 உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் உறுப்பினர்களின் பங்கு தொகையுடன் ரூ.5 லட்சம் ரூபாய் நபார்டு மூலம் அரசால் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
-
விவசாயிகளின் விளைபொருட்கள் எதுவானாலும், அன்றைய சந்தை விலையைவிட 10 சதவீதம் அதிக விலைக்கு இந்நிறுவனமே பெற்றுக்கொள்ளும்.
-
வாங்கிய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், கிடைக்கும் லாபத்தொகையைப் பிரித்து, வருடத்தின் முதல் மாதம் பிரித்து உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
-
உறுப்பினராக இருக்கும் விவசாயிகளுக்கு விதையும், விவசாய இடுபொருட்களும் குறைந்த விலையில் வழங்கப்படும்.
-
விவசாயிகள் விரும்பினால் அவரவர் ஊரில் தகுதியுடைய விவசாயியின் பொறுப்பில் பால் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
-
இனி வரும் காலங்களில் கரும்பு விவசாயிகளின் கரும்பினை வாங்கி நாட்டுச்சர்க்கரையாக உற்பத்தி செய்ய வரிவகை செய்யப்படும்.
-
வரவு செலவு கணக்குகள் அவ்வப்போது வாட்ஸ்-அப் மூலமாக உறுப்பினர்களின் கைபேசியில் தெரிவிக்கப்படும்.
-
நஞ்சற்ற உணவை மக்களுக்கு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும், இயற்கை விவசாயியுமான கலிவரன் கூறுகையில், நபர்டு நிதி மூலம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பாலமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். மேலும், விளைபொருட்களை மட்டுமல்லாமல், விதைகளை விலைகொடுத்து வாங்கி, விவாயிகளுக்கு இலவசமாக விற்பனை செய்து வேளாண்மைக்கு உதவுகிறது இந்நிறுவனம்.
இந்த பகுதியில் சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், சாமை உள்ளிட்ட சிறுதானிங்களுடன், உளுந்து, வேர்க்கடலை போன்றவற்றின் விதைகளையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.20 பேர் கொண்டு உள் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு பண்ணை இயந்திரம் உ ள்ளிட்ட வேளாண் கருவிகளை இலவசமாகத் தருகிறோம்.
இதனை அவர்கள் நிர்வகித்துக்கொண்டு, சிறு அல்லது குறு விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு, அதன் வருமானத்தை 20 பகிர்ந்துகொள்வதுடன், வேளாண் கருவியின் பராமரிப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி பலவிதத் திட்டங்களை நபார்டு நிதியின் மூலம் செயல்படுத்தி வருகிறோம். எனவே வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இணைந்து பயன்பெற முன்வரவேண்டும் என்றார் கலிவரதன்.
மேலும் படிக்க...
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!