நெற்பயிரினை தாக்கும் முதன்மையான நோயாக கருதப்படுவது பாக்டீரியா இலைக்கருகல் நோய். ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பயிர் முதிர்வதற்கு முன்பே முற்றிலும் காய்ந்துவிடும் நிலை ஏற்படும்.
பாக்டீரியா இலைக்கருகல் நோய் :
நோய்க்காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக்கருகலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் பயிர் நட்ட 3 முதல் 4 வது வாரங்களில் தோன்றுகிறது. இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையாக இலேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது. இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது.
இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே பரவி பின்னர் இலையுறைக்கும் பரவுகின்றது. நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது. இவற்றிற்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காணப்படும்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான கூழ் போன்ற திவலைகள் இலையின் ஓரங்களில் காணப்படும். இலை முற்றிலுமாக காய்ந்த பின்னர் விரல்களால் தடவிப் பார்க்கும்போது இவை கரடுமுடரான பகுதிகளாகப் புலப்படும். நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும். இந்நோய் தாக்குதலினால் மகசூல் பெரிய அளவில் பாதிப்படையும்.
நோய் பரவுவதற்கான சூழ்நிலைகள் :
பெரும்பாலும் பாசன நீர், மழை மற்றும் காற்று மூலம் பரவுகிறது. பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் மூலமாக பாக்டீரியாக்கள் நெற்பயிரின் உட்புகுந்து பயிரைத் தாக்குகின்றன. மேலும் அதிக காற்று வீச்சு, மிகுந்த உரமளித்தல், காற்றுடன் கலந்த மழை ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை எளிதாக பரப்புகிறது. இதைப்போல், நடவு செய்வதற்கான சீராக்கும் கருவி மற்றும் நடவின் போது கருவியினை கையாளும் விதம் ஆகியவை கூட புதிய தாக்குதல் ஏற்பட காரணமாய் உள்ளன.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, அதனை படியவிட்டு பின் வடிகட்ட வேண்டும்.நன்கு வடிகட்டிய திரவத்தை நோய் முதல் அறிகுறி தோன்றியவுடனும், இரண்டு வார கால இடைவெளி விட்டும் தெளிக்க வேண்டும்.
- 3% வேப்பெண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்க வேண்டும்.
- இரண்டு முறை செப்பு ஹைட்ராக்சைடு 77 WP @ 1.25 கிலோ / எக்டர் 30 மற்றும் 45 நாட்களுக்குப் பிறகு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்ளின் கலவை @ 300 கிராம் + காப்பர் ஆக்ஸிகுளோரைடு @ 1.25 கிலோ / எக்டர் என்கிற அளவில் தெளிப்பதன் மூலம் பாதிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் .
மேலும் படிக்க :
கிரிஷி உதான் திட்டம்-மேலும் 21 விமான நிலையங்களை இணைக்க நடவடிக்கை
2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்