கோவையைச் சேர்ந்த வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், தமிழக அரசின் சிறந்த உழவன் உ ற்பத்தியாளர் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் கடந்த 8 வருடங்களாக ஈஷாவின் உதவியுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1,063 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த FPO வில் 70 சதவீதம் சிறு, குறு விவசாயிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகும்.
இந்த நிறுவனத்துக்கு Resource institute ஆக செயல்படும் ஈஷா அவுட்ரீச் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கட்ராசா கூறுகையில், ஆரம்பத்தில் ரூ.45 ஆயிரம் ஆண்டு வருமானம் (Annual Turnover) ஈட்டிய இந்நிறுவனம் குறுகிய காலத்திலேயே ரூ.12 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
அனைத்திற்கும் உதவி (Help for all)
விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் இந்நிறுவனம் ஒரு தீர்வாக உள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை உற்பத்தி செய்தால் மட்டும் போதும். அதை அறுவடை செய்வதில் தொடங்கி விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துவது வரை அனைத்துப் பணிகளையும் இந்நிறுவனமே பார்த்துக் கொள்கிறது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் வழிகாட்டுதலின்படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்றி காட்டுவதே தங்கள் இலக்கு என்றார்.
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு.குமார் பேசுகையில்,
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான, லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். இந்நிறுவனத்தின் மூலம் தேங்காய், பாக்கு, காய்கறிகள் போன்றவற்றை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
முதல்கட்டமாக, நாங்கள் விளைவித்த 15 வகையான காய்கறிகளை 5 டன் அளவுக்கு கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இதை படிப்படியாக அதிகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!