சிறு ரப்பர் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்பட உள்ளதாக மார்த்தாண்டம் ரப்பர் வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியாகியாளியுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் வாழைக்கான விலை முன்னறிவிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதைப்போன்று சமீபத்தில் அரவைக் கொப்பரை கொள்முதலுக்கான இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதுத்தொடர்பான நினைவூட்டல் தஞ்சாவூர் விற்பனைகுழு செயலாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட செய்திகள் தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:
ரப்பர் விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் நடவு செய்துள்ள விவசாயிகள் ரப்பர் வாரியத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரப்பர் வாரியத்தின், மார்த்தாண்டம் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு ரப்பர் மறுநடவு மற்றும் புது நடவு செய்துள்ள சிறு ரப்பர் விவசாயிகளுக்கு ரப்பர் வாரியத்தின் மானியம் வழங்கப்படவுள்ளது.
இரண்டு ஹெக்டேர் வரை ரப்பர் மறுநடவு மற்றும் புது நடவு செய்துள்ள விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு மானியம் பெறலாம். விவசாயப் பணிகளுக்கு ரூ. 20 ஆயிரம், ரப்பர் செடிகளுக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இந்த மானியத்தைப் பெற தகுதியுள்ள விவசாயிகள் ரப்பர் வாரியத்தின் சர்வீஸ் பிளஸ் இணையதளம் வழியாக நவ.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் கோயம்புத்தூர் சந்தைகளிலுள்ள பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை மற்றும் சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில் டிசம்பர், 2023-ல் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 26 – 28 வரையிலும், கற்பூரவள்ளி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 28 – 30 வரையிலும் மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 38 – 40 வரையிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் வரும் காலங்களில் பருவநிலையை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அரவை கொப்பரை கொள்முதல்- காலக்கெடு நீட்டிப்பு
தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கொள்முதல் நடப்பாண்டு நவம்பர் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச ஆதரவு விலையான ரூபாய் 108.60 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்படுவதுடன் இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் மேற்காணும் ஒழுங்குமுறை விற்பனைகூடங்களை அணுகி பயன்பெறுமாறு தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
ஒரே நாளில் 600 ரூபாயா? தலை சுற்ற வைத்த தங்கத்தின் விலை!
பயிர் காப்பீடு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அலர்ட்