விவசாயத்தைப் பொறுத்தவரை, இயற்கையோடு இணைந்த செயல்பாடுகள் எப்போதுமே கூடுதல் பலனைக் கொடுக்கும் என்பது உறுதி. இதற்கு உதாரணமாக, இறந்த கோழிகளை குழிதோண்டி புதைப்பதற்குப் பதில், அந்த கோழிகளை பயன்படுத்தி பறவை கரைசல் உரம் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் பாப்பம்பாடியை சேர்ந்த எம்.பி.ஏ., இளைஞர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர், இறந்த கோழிகளை பயன்படுத்தி, நாட்டிலேயே முதல் முறையாக, 'பறவை கரைசல் உரம்' தயாரித்துள்ளார்.
புதிய யோசனை
இது குறித்து அவர் கூறியதாவது: பாப்பம்பாடியில் என் குடும்பத்தாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் தினமும், 30 கோழிகள் இறக்கின்றன. இதை, அதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது மிஷினில் எரிக்க வேண்டும் என்பது அரசு விதி.
அதற்குப் பதில், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஆலோசனை படி, மாற்றி யோசித்தேன். இதன் பலனாக பறவைக் கரைசல் உரம் கிடைத்தது.
கூடுதல் விளைச்சல்
இதனை முதற்கட்டமாக, எங்கள் விவசாய நிலத்தில் நெல்லி, சப்போட்டா, கொய்யா, தென்னை மரங்களின் வேர் பகுதியை சுற்றி, 2 லிட்டர் வீதம், 6 மாதத்திற்கு ஒரு முறை ஊற்றினோம்.இதனால், 30 சதவீத கூடுதல் விளைச்சல் கிடைத்தது. மேலும், பருத்தியை தாக்கும் பூச்சிகளை, 3 லிட்டர் கரைசலுக்கு, 20 லிட்டர் நீர் சேர்த்து, 'ஸ்ப்ரே' செய்தால், பூச்சிகள் இறக்கின்றன.சுற்று வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கும் உரமாக மாறிய இந்த பறவை கரைசலை கொடுக்க உள்ளோம். புதிய தொழில்நுட்பம் மூலம், புதிய இயற்கை உரம் தயாரிப்பது மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்முறை
இறந்த எட்டு கோழிகளை துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் மண் பானையில் போட்டு, அதில், 500 மில்லி கரும்புச்சாறு, சாணிக்கரைசல் மற்றும் நீரை ஊற்றி சாக்குப்பையால் மூட வேண்டும். அந்த பானைகளை தரையில் வைத்து அதன் மீது, கோழி கழிவுகளை பரப்பி மூடி, மிதமான ஈரப்பதத்துடன் மூன்று மாதம் வைக்க வேண்டும். துண்டுகளாக வெட்டப்பட்ட இறந்த கோழிகள், பாக்டீரியா மூலம் கரைசலாக மாறி உரமாக உருவெடுக்கிறது.
மேலும் படிக்க...