வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க முன்வராததால், 9ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
தொடரும் போராட்டம் (Protest Continue)
புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியிலும், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது
2 விவகாரங்களுக்கு தீர்வு (Solution to 2 issues)
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்கனவே மத்திய அரசு 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மின்கட்டண விவகாரம். வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது.
இருப்பினும், முக்கிய கோரிக்கைகளான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றில் மத்திய அரசு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் 7 மற்றும் 8 ம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு(Case in the Supreme Court)
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த 11-ந் தேதி அதிரடியாகத் தடை விதித்தது. அத்துடன், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அறிக்கை அளிப்பதற்காக 4 உறுப்பினர் குழுவையும் அமைத்தது.
9ம் கட்டப் பேச்சு(9th Phase Talk)
இந்த நிலையில், மத்தியஅரசுக்கும், விவசாயிகள் அமைப்புகளுக்கும் இடையான 9-வது கட்டப் பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று திட்டமிட்டபடி நடந்தது. இதில் மத்திய அரசின் சார்பில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் தரப்பில் 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குமார் 5 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அரசாங்கம் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது, தேவையான மாற்றங்களைச் செய்ய தயார் என உறுதி அளிக்கப்பட்டது.
இருவரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது. இருந்தபோதிலும், இரு தரப்பினரும் வரும் 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
மேலும் படிக்க...
வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!