வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் பொதுமக்கள் தன்னுடைய தோட்டத்திற்கு வந்து இலவசமாக வெங்காயத்தை எடுத்துச் செல்லலாம் என விவசாயி ஒருவர் அறிவித்திருப்பது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2 மாதங்களாக வெங்காயம் அமோக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 10ரூபாய்க்கும் குறைவாகவேக் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விரக்தியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வெங்காயத்தை இலவசமாக விற்பனை செய்ய முன்வந்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பனப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். தற்போது வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அறுவடை செய்வதற்கான ஆட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் பொதுமக்கள் தனது தோட்டத்திற்கு வந்து வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லுங்கள் என அதிருப்தியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய சிவராஜ், ‘வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், இப்போது அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு சென்றால் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
எனவே, இலவசமாக கொடுத்தால் மக்களாவது நினைத்து பார்ப்பார்கள், எடுத்து செல்லட்டும்’ என்றார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் வெங்காயத்திற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...