உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், பயறு தரம் பிரிக்கும் இயந்திரம் வாடகைக்கு வழங்குதல், திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பொருளீட்டுக்கடன் பெறும் வசதி மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள மறைமுக ஏலம் குறித்த தகவல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் வாடகைக்கு:
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள பயறு தரம் பிரிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் குவிண்டாலுக்கு 200 ரூபாய் வீதமும், வியாபாரிகள் குவிண்டாலுக்கு 250 ரூபாய் வீதமும், வாடகையில் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரத்தை விவசாயிகள் காய் ஒன்றுக்கு 50 பைசா வீதமும், வியாபாரிகள் காய் ஒன்றுக்கு 60 பைசா வீதமும், வாடகையில் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வியந்திரங்களை பயன்படுத்திட விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்கண்ணிப்பாளரை 04562- 245038, 9003753160 என்ற எண்ணிற்கும் மற்றும் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்கண்ணிப்பாளரை 04563-222615, 9952341770 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெறுமாறு விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் பொருளீட்டுக்கடன்:
திருவாரூர் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் எட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் குடவாசல், மன்னார்குடி, பூந்தோட்டம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வடுவூர், வலங்கைமான் மற்றும் கொரடாச்சேரி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து போட்டி விலையில் தரகு, கமிஷன் ஏதுமின்றி சரியான எடையில் விற்பனை செய்து பயன்பெறலாம்.
இம்மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 21,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பதினைந்து நாட்களுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் நாளொன்றுக்கு குவிண்டாலுக்கு பத்து பைசா என்ற குறைந்த வாடகையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க வசதி உள்ளது. மேலும் விளைபொருட்களின் மதிப்பிற்கு ரூபாய் 3 இலட்சம் வரை 180 நாட்களுக்கு ஐந்து சதவீத வட்டியில் பொருளீட்டுக்கடன் பெற்று பயன் பெற திருவாரூர் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மறைமுக ஏலம்:
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மற்றும் கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு மற்றும் பருத்தி மறைமுக ஏலம் நாளை 12.09.2023 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுகிறது. எனவே, சேலம் மற்றும் கொங்கணாபுரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய்ப்பருப்பு மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர் (சேலம் விற்பனைக்குழு) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
இரவு நேர அறுவடைக்கு மாறும் விவசாயிகள்- விளைவுகள் என்ன?
PM-Kisan: தகுதியற்ற 81,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிக்கல்!