தமிழகத்தில் அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் லட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் சேதமடைந்தது. அதற்கு இன்னும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையாலும் ஏராளமான பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பயிர் பாதித்த மாவட்டங்களில், மீண்டும் ஆய்வு செய்ய மத்திய குழுவை அழைக்க வேளாண் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
புயல் பாதிப்பு
சென்னை அருகே கரையைக் கடந்த நிவர் புயல் மற்றும் ராமேஸ்வரம் அருகே கரையை கடந்த புரெவி புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டியது. இதனால், சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பயிர் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசால் குழு அமைக்கப்பட்டது. பின்னர் மத்திய குழுவினர் இரண்டு கட்டங்களாக தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டர். ஆனாலும், மத்திய அரசின் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.
ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
பயிர் பாதித்த 5 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக அரசு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட, மேலும் பல மாவட்டங்களில் மீண்டும் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயிர் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில், வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய குழுவுக்கு பரிந்துரை
இந்த ஆய்வு பட்டியல், விரைவில் மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக வேளாண் துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் பின்னரே, அரசால் நிவாரணம் அறிவிக்கப்படும். இதனிடையே, பயிர் பாதித்த புதிய மாவட்டங்களில், ஆய்வு செய்ய மத்திய குழுவை மீண்டும் அழைக்க வேளாண் துறையினர் பரிந்துரைத்துள்ளனர். எனவே, பயிர் பாதிப்பை ஆய்வு செய்ய, மத்திய குழுவினர் மீண்டும் தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு! ஆட்சியர் உறுதி!
மூட்டைகளில் நாற்றுகள் முளைத்த நெல்மணிகள்- கொள்முதல் செய்ய மறுப்பு
கரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி!