வேளாண் நிலங்களில் மண் வளத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த சணப்பை சாகுபடி செய்யலாம் என, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் செயல்படும், இந்திய வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது பற்றி தெரிவித்துள்ளனர்.
சணப்பை சாகுபடி
இந்தியா சணப்பை உற்பத்தியில், உலகளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக்கூடிய, குறிப்பாக களர் மற்றும் உவர் மண்ணிலும் செழித்து வளரக் கூடியது இந்த சணப்பை. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய பயறு வகை தாவரம். பொதுவாக விவசாயிகள் மண்ணை வளப்படுத்துவதற்காக பயிர் சாகுபடிக்கு முன் சணப்பு விதைக்கும் பழக்கம் இருக்கிறது.
சணப்பை காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் தன்மை கொண்டது என்பதால் விதைத்த 45 நாள்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டது. 60- 90 நாட்களில், ஒரு ஹெக்டரில், 50 — 60 கிலோ தழைச்சத்தை, மண்ணில் நிலை நிறுத்துகிறது. சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணின் ஆழத்துக்கு ஊடுருவி, நீர் மற்றும் காற்று, எளிதில் மண்ணில் புகும்படி செய்கிறது. மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது.
பயிர் சுழற்சி
சணப்பை பயிரிட்ட பின் பயிர் சுழற்சி முறையில் நெல், தானிய பயிர், மக்காச்சோளம், வெங்காயம் ஆகியவற்றை பயிரிடலாம். சணப்பை பயிரிட்ட நிலத்தில், நெல் சாகுபடி, உளுந்து, துவரை போன்றவை சாகுபடி செய்யும் போது, 20 — 35 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி மேல் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் சணப்பு மிகவும் வேகமாக வளரும் என்பதால் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூல் அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமல்லாது சணப்பையின் இலைகளை கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக அளிக்கலாம். அதன் தண்டு பகுதியிலிருந்து பெறப்படும் நார், கயிறு தயாரிக்க பயன்படுவதால் விவசாயிகள் சணப்பு சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர்.