அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வளர்ச்சியூக்கி என்றால் அது தசகவ்யா ஆகும்.
பெயர்க்காரணம்
பொதுவாக கவ்யா என்றால் அது மாட்டில் இருந்து எடுக்கப்படும் பொருட்களைக் குறிக்கும். இதனைப் பக்குவமாகக் கலந்துச் செடிகளுக்கு இட்டால் அதன் வளர்ச்சி துரிதப்படுத்தப்படும்.
எங்கு பயன்படுத்தலாம்?
வெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு தசகவ்யா பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
1.தும்பைச் செடி
2. கொலிஞ்சி
3.ஊமத்தை
4.எருக்கம்
5.நொச்சி
6.புங்கம்
7.காட்டு ஆமணக்கு
8.அடாதோடா
9.வேப்பிலை
10.பஞ்சகவ்யா
தயாரிப்பு முறை
தாவர வடிசாறு
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து இலைகளையும் நறுக்கிக்கொள்ளவும். ஒருகிலோ இலைகளுக்கு ஒரு லிட்டர் கோமியம் அதாவது 1:1 என்ற விகிதத்தில் 10 நாட்களுக்கு ஊற வைக்கவும். அவ்வாறு தயாரித்த தாவர வடிசாற்றை, 5:1 என்ற கணக்கில் பஞ்சகவ்யாவில் சேர்க்கவும். அதாவது 5 லிட்டர் பஞ்சகவ்யாவில், ஒரு லிட்டர் தாவர வடிச்சாற்றை விடவும். இதனை 25 நாட்களுக்கு மூடி வைக்கவும். தினமும் இந்த கரைசலைக் குலுக்கிவிடவும்.
பயன்படுத்தும் முறை (How to use)
-
தசகவ்யாக் கரைசலை நன்கு வடிகட்டிக்கொள்ளவும். ஏனெனில், தெளிப்பானின் நுனியில் இலைகள் அடைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது.
-
தசகவ்யா 3 % தழைத் தெளிப்பானாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
-
செடிகளை நடவு செய்வதற்கு முன்பு 3 % தசகவ்யாக் கரைசலில் விதைகள் அல்லது நாற்றுகளின் வேர்களை 20 நிமிடங்கள் முக்கி எடுத்தால், விதை வளர்ச்சி மற்றும் வேர்கள் உருவாதல் அதிகமாக இருக்கும்.
-
அனைத்து காய்கறிகள் மற்றும் தோட்டப்பயிர்கள் வளரும்போது வாரம் ஒருமுறை இக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
நன்மைகள் (Benefits)
செடியின் வளர்ச்சி, மகசூல் மற்றும் பயிரின் தரம் அதிகரிக்கும்.
அசுவுணி, செடிப்பேன், சிலத்தி மற்றும் இதர உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இலைப்புள்ளிகள், இலைக்கருகல், சாம்பல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
குன்றுகளில் வளர்க்கப்படும் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களையும் தசகவ்யாக் கட்டுப்படுத்தும்.
பஞ்சகவ்யா தயாரிப்பு
தேவையான பொருட்கள்
மாட்டுச்சாணம் - 5 கிலோ
கோமியம் - 3 லிட்டர்
பசும்பால் - 2 லிட்டர்
புளித்தத் தயிர் - 2 லிட்டர்
பசு நெய் - 500 கிராம்
இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
கூடுதலாகச் சேர்க்க (Added Extra)
இவற்றுடன் 3 இளநீர், 12 பழுத்த அல்லது அழுகிய வாழைப்பழம், கையளவு உயிர் மண்(living soil), கையளவு வெல்லம், சிறிதளவு சுண்ணாம்பு(Slacked Lime)ஆகியவற்றையும் சேர்த்து, வேப்பங்குச்சியால் நன்றாகக் கலக்கவும். தினமும் திறந்து சில மணி நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பிறகு பஞ்சகவ்யா தயாராகிவிடும். இதனை 30 முதல் 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க...
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!
கால்நடைகளின் பசுந்தீவனமான அசோலா- இயற்கை முறையில் வளர்ப்பது எப்படி?