வேளாண் விளைப் பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்கள், பாரத பிரதமர் அறிவித்த உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு-குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை
இத்திட்டத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளை பொருள் என்ற அடிப்படையில், தருமபுரி மாவட்டத்துக்கு சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு 35 % வரை மானியம்
மேலும், இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன்பெற வாய்ப்பு உள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
கடன்களுக்கு வங்கி மூலம் ஏற்படு
மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம். எனவே, சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற சிறகு அவரைக்காய்! தென்னையில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துமா?
இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!