பனை மரங்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கற்பகத் தரு, கற்பக விருட்சம் என்ற பெயர்களில் வழங்கப்படும் பனை மரத்தை சார்ந்து வாழ்வோருக்கு, இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த அறிவிப்பில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், 'தமிழகத்தில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் மானியத்தில் வழங்கி, ஏரிக் கரைகளிலும், சாலையோரங்களிலும் வளர்க்க ஏற்பாடு செய்யப்படும். 'ஆரோக்கியத்தை தரும் பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை பிரபலப்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் பனை வெல்லம் வினியோகிக்கப்படும். பனை மரங்களை வெட்ட தடை விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பனை பற்றிய வரலாற்று தகவல்களை, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் கி.ஸ்ரீதரன் கூறியதாவது:
நிலத்தடி நீரை காக்கும் தன்மை பனை மர வேர்களுக்கு உண்டு. இது, வேர் முதல் குறுத்து வரை பயன்படக் கூடியது. அதனால் தான் இதை, 'கற்பகத் தரு' என்பர். 'தாள விலாசம்' என்ற நுால், பனையின் பயன்பாடுகளை பற்றி கூறுகிறது.
பனை ஓலைச் சுவடி
நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும், பனை ஓலைச் சுவடிகளில் தான் எழுதப்பட்டன. கோவில்களில் கல்வெட்டுகள் எழுதப்படும் முன், பனை ஓலையில் தான் எழுதப்பட்டன.கோவில்களில் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, மாணிக்கவாசகர், அகத்தியர் போன்றோர் கைகளில் சுவடி ஏந்தியிருப்பதைப் போல் தான் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை, கல்வியின் அடையாளம்.
விழுப்புரம் அருகில் உள்ள, 'பனைமலை' என்னும் பல்லவர் கால கோவிலில், பனை மரமே இறைவன் எனும்படியான ஓவியம் உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் தாளகிரீசுவரர்.அதேபோல், திருவோத்துார், திருப்போரூர், திருமழபாடி, திருப்பனந்தாள், திருப்பனையூர், திருப்பனங்காடு உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோவில்களுக்கு, தல விருட்சமாக பனை மரமே உள்ளது.
காஞ்சிபுரம் அருகில் உள்ள திருப்பனங்காடு, கிருபாநிதீசுவரர் கோவிலில் உள்ள 15ம் நுாற்றாண்டு கல்வெட்டில், 'உயிருள்ள பனை மரங்களை வெட்டக் கூடாது' என்ற உத்தரவு உள்ளது. மேலும், அவ்வூரில் உள்ள அளவுகோலின் இரு முனைகளிலும், பனை மர உருவங்கள் பொறிக்கப்பட்ட தகவலும் உள்ளது.
பனை நடவு
சீர்காழியில் உள்ள சோழர் கல்வெட்டில், பயிரிட பயன்படாத நிலங்களில் பனை மரங்களை நடவு செய்யும்படி, அரசு ஆணையிட்ட செய்தி உள்ளது.
ஒரு ஊரை உருவாக்கும் முன், தென்னை, மா, பலா, பனை, இலுப்பை போன்ற மரங்களை நட்ட தகவல்கள் கல்வெட்டுகளில் உள்ளன. சேர மன்னர்கள் போரில் வென்ற பின், பனம் பூவை தான் சூடியுள்ளனர். அவர்களின் அரச முத்திரையிலும் வில், யானையுடன் பனை மரத்தையும் பயன்படுத்தி உள்ளனர். இப்படி ஏராளமான குறிப்புகள், பனை மரங்கள் பற்றிய வரலாற்றில் உள்ளன என்று அவர் கூறினார்.
Read More
மகசூலை அதிகரிக்க மண்ணை ஆய்வு செய்து உரமிட வேண்டும்!
பல்வேறு வேர்களின் அற்புதப் பயன்கள்!