மலையடி வாரங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் மிகப் பெரிய பிரச்சனை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பது ஆகும். காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அகழி, மின்சார வேலி என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். எனினும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் புதிய முயற்சியாக ஆமணக்கு செடி கொண்டு வேலி அமைத்து யானைகளின் வரவை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோவனுர் மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். காட்டு யானைகள் அவற்றை சேதப் படுத்துவதால் அவற்றை பாதுகாக்க யானைகள் விரும்பாத, சற்று நெடி அதிகமுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் அவரை, ஆமணக்கு, மஞ்சள் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மலையடிவார பகுதிகளில் ஆமணக்கு செடி பயிரிட்டு உள்ளனர். இதன் நெடி, இலையின் துவர்ப்பு சுவை போன்ற காரணங்களினால் யானைகள் விளை நிலங்களுக்குள் செல்வதை தவிர்த்து வருகின்றன. இதனால் பயிர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக வளர்வதாக மலையடிவார பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.