இயற்கை விவசாயத்தை நாடுவோர் பெரும்பாலும் இயற்கை உரங்களையும், ஈடு பொருட்களையும் விரும்புகிறார்கள். வேளாண் கழிவுகள் நிலத்திற்கே உரமாக வேண்டும் என்பதே சரியானது. அந்த வகையில் தென்னை நார்கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் பற்றி வேளாண் அலுவலர் தகவல் தெரிவித்தார்.
உரம் தயாரிக்கும் முறை
உரம் தயாரிக்க சற்று மேடான நிழல் பாகங்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். 1 ½ அடி அகலமும், 10 அடி முதல் 15 அடி நீளமுள்ள இடத்தை தேர்வு செய்தல் வேண்டும். அவற்றில் நார்கழிவு மற்றும் ஏனைய ஈடு பொருட்களை போட வேண்டும். 10 அடுக்குகளாக மேடை போன்று அமைக்க வேண்டும். முதல் அடுக்கில் தென்னை நார்க்கழிவுகளை தூவ வேண்டும். நெருக்கமாக வைத்தலை தவிர்தல் வேண்டும். பின்பு அதன் மேல் யூரியாவை எடுத்து நார்க்கழிவுகளின் மீது முழுமையாக படும் படி தூவ வேண்டும். அதனை தொடர்ந்து 2 வது அடுக்கிலும் நார் கழிவை தூவி அதன் மேல் 200 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும். இவ்வாறாக அடுக்குகள் அமைத்த பின்பு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய நீர் தெளித்து வர வேண்டும். இரண்டு மாதங்களில் தென்னை நார்கள்கழிவுகள் முழுமையாக மக்கிய உரமாக மாறிவிடும். இவற்றிலிருந்து ஒரு டன் தென்னை நார்க்கழிவு உரம் கிடைக்கும்.
பயன்கள்
- தென்னை நார்கள்கழிவு அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
- மண்ணின் கடினத்தன்மை அதிகரிப்பதுடன், மண்ணில் நீர் பிடிப்பு தன்மை மேம்படுகிறது.
- களிமண்ணில் நார்கள்கழிவுகளை பயன்படுத்துவதன் மூலம் மேல் மற்றும் அடிமண்ணின் அடர்த்தி குறைவதோடு அனைத்து தாவர சத்துகளும் நன்கு செயலாற்றுகிறது.
- உயிர் சத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம் மண் வாழ் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உருவாக்குகிறது.
நன்றி: அக்ரி டாக்டர்