கிராமப்புறங்களில் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக அல்லது எருவாக பயன்படுத்துவர். இந்த சாணத்தை வரட்டி ஆக்கி எரிப்பதற்கு எரிபொருளாகவும் இந்த சாணம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாண எரிவாயு முறையின் மூலமாக மட்டுமே ஒரே நேரத்தில் இவ்விரு பயன்களையும் சேர்ந்து அடைய முடியும். மீத்தேன் வாயு மற்றும் ஸ்லரி என்னும் கழிவு இரண்டும் சாண எரிவாயு முறையில் பெறப்படுகிறது. மீத்தேன் வாயு எரிபொருளாகவும் ஸ்லரி என்னும் கழிவு பொருள் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பண்ணையில் வீணான கழிவுகள், தீவனம், சாணம், சிறுநீர், இதர வீட்டு காய்கறி கழிவுகள் போன்றவற்றை காற்றில்லா சூழலில் நொதிக்கச் செய்து அதிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் முறை சாண எரிவாயு என அழைக்கப்படுகிறது. இதில் கரியமில வாயு, மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு, நைட்ரஜன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இதில் மீத்தேன் 55 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த மீத்தேன் வாயு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சாண எரிவாயு முறையின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்வதற்கு காற்றில்லா சூழலில் இவற்றை நொதிக்க செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டால் காலம் முழுக்க செலவில்லாமல் கழிவுப் பொருட்களின் மூலமே எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். இந்த அமைப்பு செரிப்பான் அல்லது நொதிகலன், வாயு பீப்பாய் அல்லது வாயுக்கலன், கழிவுகளை வெளியேற்றும் அமைப்பு, குழாய் அமைப்புகள், கலவைக் கலன் போன்ற அமைப்புகளை கொண்டிருக்கும்.
கலவை கலனில் சாணம் மற்றும் தண்ணீரை ஒன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில் கரைத்து உட்செலுத்த வேண்டும். இது நொதித்தல் கலனில் சேகரமாகும். இங்கு காற்றில்லா சூழலில் நொதித்தல் செயல்பாட்டின் மூலம் எரிவாயு உற்பத்தியாகி இவை வாயுக்கலனில் சேகரமாகிறது. இவை குழாய் அமைப்புகள் மூலமாக வெளியேற்றப்பட்டு அடுப்பு எரிப்பதற்கு அல்லது விளக்கு எரிப்பதற்கு அல்லது என்ஜின்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுகிரது. கழிவுகள் அதனை வெளியேற்றும் அமைப்பு மூலமாக சேகரிக்கப்பட்டு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
ஈரமான சாணத்தை எருவாக உடனடியாகப் பயன்படுத்த முடியாது. மாட்டுச்சாணத்தை மறு வருடமே எருவாக பயன்படுத்த முடியும். இந்த ஈரமான சாணம் ஈக்கள் போன்ற புற ஒட்டுண்ணிகளை ஈர்ப்பதால் அப் புற ஒட்டுண்ணிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். சாண எரிவாயு முறையை பின்பற்றுவதால் இந்த ஈக்கள், கொசுக்கள் போன்றவற்றின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். மேலும், சாணத்தை சேகரித்து வைப்பதற்கு தனியாக இடம் தேவையில்லை.
சாண எரிவாயு முறையில் பெறப்படும் எரிவாயுக்களின் மூலம் அடுப்பு எரிப்பதால் புகை இல்லாமல் அடுப்பு எரியும். மேலும், இவற்றால் பாத்திரங்களில் கரி படிவதும் குறைவாக இருக்கும். எனவே, இவற்றை அடுப்பெரிக்க பயன்படுத்தலாம். விளக்கு எரிப்பதற்கும், என்ஜின்களை இயக்குவதற்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், பண்ணைக் கழிவுகளை நல்லமுறையில் நிர்வகிக்க இம்முறை பயன்படுகிறது. எரிவாயு உற்பத்திக்குப் பின்னர் அதன் மூலம் பெறப்படும் கழிவுகளை உரமாகவும் பயன்படுத்தலாம். இந்தக் கழிவுகள் பன்றி மற்றும் மீன்களுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Dr. ச. பாவா பக்ருதீன்
கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,
குரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
லூதியானா, பஞ்சாப்-141001