வேளாண்மையின் ஆதாரம் தரமான விதைகள் ஆகும். எனவே விதைகளை பயன்படுத்துவதற்கு முன்பு முறையாக பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். அதே போன்று விதையை விற்பனை செய்பவர்கள் அரசு உத்தரவின்படி, தர அட்டை பொருத்தப்பட்ட விதைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
ஆதார நிலை விதைகளுக்கு வெள்ளை நிற சான்றட்டையும், சான்று நிலை விதைகளுக்கு நீலநிற சான்றட்டையும் கொடுக்கபடுகிறது. அதேபோன்று தனியார் விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளை உண்மை நிலை விதைகள் என்பர்கள். உண்மை நிலை விதை பற்றாக்குறை காலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இவ்விதைகளை பகுப்பாய்வு செய்து, முடிவுகளை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அனைத்து விவசாயிகளும் தரமான விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விதைப் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையத்தின் மூலம் அதிக செலவில்லாமல் உரிய காலத்தில் தங்களிடம் உள்ள விதைகளை பகுப்பாய்வு செய்ய இயலும்.
பகுப்பாய்விற்கு தேவைப்படும் மாதிரிகள்
- நெல், கீரை விதைள் - 50 கிராமும்,
- மக்காச் சோளம், மணிலா விதைகள் - 500 கிராமும்,
- சோளம், உளுந்து, பாசிப் பயறு, சூரிய காந்தி, வெண்டை விதைகள் - 100 கிராம்
- கத்தரி, மிளகாய், தக்காளி விதைகள் - 10 கிராம்
மேலே குறிப்பிட்ட அளவில் எடுத்து துணிப்பையில் இட்டு, பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு, அத்துடன் ஒரு விண்ணப்பக் கடிதத்தை இணைத்து, பரிசோதனை மையத்தில் நேரில் சென்று விதை பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு விதை மாதிரிக்கும் பரிசோதனை கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படும்.
Anitha Jegadeesan
Krishi Jagran