மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 April, 2020 1:55 PM IST

கரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ள நிலையில் அரசு வேளாண் தொழில் மற்றும் விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. எனினும் விவசாயிகள் இக்காலகட்டத்தில் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எதிர் வரும் காலங்களை பயனுள்ளதாக்கி கொள்ளலாம்.

பொதுவாக கிராமங்களில் கரோனோவின் தாக்கம் சற்று குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால் கிராமத்தில் வீடுகள் தனித்தனியாக இருப்பதனாலும்,  அங்கு அதிகளவில் வேப்பமரம், புங்க மரம், பனை மரம் போன்ற மரங்கள் இருப்பதனாலும், ' இந்த நோயின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். அதற்காக நாம் நமது தற்காப்பு முறைகளை விட்டுவிடக்கூடாது. அதே சமயத்தில் சமூக இடைவெளி நாம் கடைபிடிக்க வேண்டும். அனைவரின் ஆரோக்கியமும் விவசாயிகளின் கைகளில் தான் உள்ளது. வீட்டில் இருப்பவர்களையும், வெளி உலகத்தில் இருக்கும் மக்களுக்கும்  உணவு அளிக்கும் பெரும் பொறுப்பு விவசாயிகளுக்கு உள்ளது.

விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கோடை உழவு

முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன என்றால் கோடை உழவுவை மேற்கொள்ள வேண்டும்.  கோடை உழவினை கண்டிப்பாக ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவர் அல்லது இருவர் டிராக்டர் எடுத்துக்கொண்டு, 'அந்த கிராமம் முழுவதையும் கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் களைகளை கட்டுப்படுத்திவிடலாம். பூமியில் இருக்கக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம். இதனை ஒருங்கே எல்லோரும் சேர்ந்து ஒருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தால், இந்த பணி வெற்றிகரமாக இந்த சமயத்தில் முடித்து விடலாம்.  இனிமேல் வரக்கூடிய கோடை மழையில் நாம் சாகுபடிக்கு தயார் ஆகி விடலாம் .

தொழு உரம் தயாரித்தல்

நம்மிடத்தில் உள்ள தொழு உரங்களை நன்கு காய வைத்து, அதே சமயத்தில் அந்த தொழு உரங்களை ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்ற வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஒரு குழியில் தொழு உரங்களை போட்டு அதில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் போன்றவையெல்லாம் குவித்து ஒன்றின் பின் ஒன்றாக போட்டு, கூடவே மண்புழு உரமும் போட்டு, நன்றாக மூடி அதனை 15 நாட்களுக்கு ஒருமுறை நன்கு புரட்டி விட்டு வந்தால், இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் தயாராகிவிடும். இந்த சூரிய ஒளியில் நிச்சயம் ஊட்டமேற்றிய தொழுவுரம் நமக்கு கிடைத்து விடும். இது வரக்கூடிய பருவத்திற்கு நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடிய தொழு உரமாக மாறிவிடும்.

தானியங்களை சேமித்து வைத்தல்

நாம் அறுவடை செய்து வைத்த தானியங்களை பக்குவப்படுத்தி வைப்பதற்கு இந்த வெயிலை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்று கூடி இந்த சேமிப்பு தானியங்களான சிறுதானியங்கள் ஆக இருந்தாலும் சரி நெல் மற்றும் நிலக்கடலை போன்ற விதைகளாக இருந்தாலும் சரி, அவற்றை நன்றாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக நீங்கள் உங்களது தானியங்களை சேமிக்கும் போது அதில்  எந்தவிதமான ரசாயன பொருட்களையோ அல்லது அந்த தானியங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு மாத்திரைகள்  செல் பாஸ் போன்ற மாத்திரைகள் ஒரு சில விவசாயிகள் போடுகிறார்கள். அவ்வாறு கண்டிப்பாக போடக் கூடாது. ஏனென்றால் நாம் அனைவரும் வீடுகளில் இருப்பதனால் அந்த வாடை நம்மைத் தாக்கும்.

இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆகவேதான் தானியங்களை அவ்வப்பொழுது வெளியே எடுத்து நன்கு வெயிலில் காய போட வேண்டும். நன்கு  காய்ந்த வேப்பிலையை டிரம்மில் போட்டு  தானியங்களை  பாதுகாக்கலாம்.  துவரை பயிர்களுக்கு மண் கட்டும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த செயல்களை இந்த நேரத்தில் எல்லாரும் செய்யலாம். 

மதிப்புக்கூட்டி பொருள்கள் தயாரித்தல்

அதுவும் குறிப்பாக பெண்கள் தங்களது வீட்டில் ஊறுகாய், வத்தல்/வடகம் போட்டு இந்த வெயிலில் செய்து வைத்தீர்கள் என்றால் அதனுடைய மதிப்பு கூட்டி நாம் இரண்டு மாதம் கழித்து வெளிமார்க்கெட்டில் இதனை விற்றுவிடலாம். அதுவும் குறிப்பாக இப்பொழுது வெங்காயம் கை வாசம் உள்ள விவசாயிகள் வடகத்தைப் போட்டு வைக்கலாம். தக்காளி போன்றவற்றை அறுவடை செய்தவர்கள், மார்க்கெட்டில் விற்பனை அதிகம் தங்கி விட்டால் அதை ஊறுகாய் ,தக்காளி ஜாம், போன்ற வற்றைத் தயாரிப்பதற்கு தெரிந்து கொண்டு அதனை தயார் செய்யலாம் இப்படிக்கு நாம் மதிப்புக்கூட்டி பொருள்களை சேமித்து வைக்கலாம்.

குறிப்பாக உங்களது தோப்பில் கொப்பரைத் தேங்காய் கிடைத்தால் அந்த கொப்பரை தேங்காய் எல்லாம் எடுத்து வைத்து  தேங்காய் எண்ணெய் ஆடுவதற்கு நாம் தயார் படித்துவிடலாம். மதிப்புக் கூட்டுப் பொருள்களை நாம் தயார் செய்வதற்கு இந்த நேரத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மானாவாரி நிலத்தில் முன்பு கூறியது போல கோடை உழவை கண்டிப்பாக செய்யவேண்டும்.

விவசாயப் பணி மேற்கொள்வது

உங்களது நிலத்தில் காய்கறி பயிரிட்டு இருந்தால் முடிந்தவரை உங்கள் வீட்டில் இருப்பவர்களை கொண்டே காய்கறிகளை பறிக்கலாம். இந்த காய்கறிகளை பறிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் ஒரு நிலத்தில் ஒரு மூன்று பேர் மட்டும் 4 அல்லது 5 அடி தள்ளி தள்ளி நின்று கொண்டே காய்களை பறிக்க முடியும். வெளியாட்கள் யாரும் இல்லாமலேயே நாமே விவசாயப் பணியை மேற்கொள்ளலாம்.

நீர் மேலாண்மை

இந்த நேரத்தில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் கண்டிப்பாக சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ள வேண்டும். சொட்டு நீர் பாசனம் செய்வதற்கு ஒரு ஆள் இருந்தால் போதும் அவரே அதை திருப்பி விட்டு  தோட்டத்தில் முழுவதையும்  அவரே பாசனம் செய்ய முடியும்.

இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல்

இந்த நேரத்தில் நமக்கு கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் இயற்கை பூச்சி விரட்டிகளை வீட்டிலிருந்தே தயார் செய்து விடலாம். அதாவது மீன் அமினோ அமிலம், இதற்கு தேவையானது மீன் மற்றும் நாட்டு வெல்லம்.மீன் உங்களது கிணற்றில்இருந்தால் அதை பிடித்து வைத்து அதன் மூலம் இதனை தயார் செய்துவிடலாம். இந்த வளர்ச்சி ஊக்கியை தயார் செய்ய  21 நாட்களாகும். ஆகவே இப்போது தயார் செய்து விட்டீர்கள் என்றால் 21 நாட்கள் கழித்து இதனை நீங்கள் உங்களது பயிர்களுக்கு நன்கு பயன்படுத்தலாம். பஞ்சகாவியா என்ற இயற்கை பூக்சி விரட்டியை தயார் செய்ய 18 நாட்கள் பிடிக்கும். ஆகவே இந்த இயற்கை பூச்சிவிரட்டி, இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை, நீங்கள் கண்டிப்பாக இந்த நேரத்தில் உங்களது தோட்டத்தில் நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

முடக்கு போடுதல்

தென்னதோப்புக் வைத்திருக்கும் விவசாயிகள் ஒரு தென்னை மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும்  இடையில் குழிகளை வெட்டி அதில் காய்ந்த சருகுகள், தென்னை ஓலைகளை போட்டு மண் போட்டு மூடி  விடுங்கள. அப்படி செய்தீர்கள் என்றால் இந்த வெயிலின்  தாக்கம் குறைந்து விடும். மண்ணின் ஈரம் காக்கப்படும். அதனால் தென்னை மரங்கள் வாடாமல் இருக்கும்.

ஆகவே மேற்கண்ட முறைகளான ஊட்டமேற்றிய தொழு உரம்,  சிறுதானியங்களை சேமித்துவைத்தல் மதிப்பு கூட்டுதல் மற்றும் மானாவாரி நிலத்தில் கோடை உழவு செய்தல், விதைகளை நன்கு பக்குவப்படுத்தி வைத்தல்,  காய்கறி பழங்களை மதிப்பு கூட்டுதல்,  சொட்டு நீர் பாசனம் அளித்தல்,  இயற்கை பூச்சிவிரட்டி தயார் செய்தல்,  தென்னை மரங்களுக்கு ஓலைகளை போட்டு மண்ணை பாதுகாத்தல் போன்ற நிகழ்வுகளை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் வரும் காலங்களை வளமாக்கி கொள்ளலாம்.

 உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கைகழுவும் முறைகளையும்,  நீங்களும் தோட்டத்திற்கு சென்று வந்த பின்பு கைகழுவும் முறைகளையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கரோனோ பிடியில் இருந்து நாம் தப்பித்து விடலாம். அதுமட்டுமல்லாது விவசாய பணிகளில் இருந்து நாம் முழுமையாக வெற்றி பெற்று நல்ல மகசூல் எடுக்க முடியும்.

என்.மதுபாலன்
ஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குனர்,
9751506521
தர்மபுரி மாவட்டம் 

English Summary: During This Lockdown How farmers Can Make An Opportunity Very Useful and Profitable
Published on: 06 April 2020, 01:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now