தொடர் மழை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோத் தக்காளி 100 ரூபாயை எட்டிள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தொடரும் மழை (Continuing rain)
வடகிழக்கு பருவமழை ஒருபுறம், அடுத்தடுத்து உரவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மறுபுறம், இவற்றால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் ஒரு கிலோத் தக்காளி விலை 100ரூபாயைத் தாண்டியுள்ளது.
சந்தைகள்
கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகளும், பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகளும், தினசரி காய்கறி கடைகளும் உள்ளன. இந்த சந்தைகளுக்கு காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டுவந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.
பெரும்பாலான காய்கறிகள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
மழையால் பாதிப்பு (Damage by rain)
இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தாக்குப் பிடிக்க முடியாமல் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும், சந்தைகளுக்கு போதுமான அளவு வரத்து இல்லாததால் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
விலைஉயர்வு (increase in price)
கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு மேச்சேரி, மேட்டூர், காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்டப் பல்வேறுப் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை காரணமாக செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது.
வரத்துகுறைவு
இதனால் நாட்டுத் தக்காளி, ஆப்பிள் தக்காளி சந்தைகளுக்கு குறைந்தளவே வருகிறது. வரத்துகுறைவு காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது என்றனர்.
மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!