வாழப்பாடி பகுதியில் கடந்த இரு மாதங்களாக வறட்சி ஏற்பட்டுள்ளதால், கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பிரதானத் தொழில் (The main Business)
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலானோர், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.
விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், வேலை வாய்ப்பு, வருவாய்க்காக விவசாயம் சார்ந்த தொழிலான ஆடுகள் கறவை மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பசுந்தீவனங்கள் (Green fodder)
இப்பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு பரவலாக மழை பெய்தது. இதனால் விளைநிலங்களில் மட்டுமின்றி மேய்ச்சல் தரையாகப் பயன்படும் தரிசு நிலங்களிலும், கால்நடை விரும்பி உண்ணும் செடி, கொடி உள்ளிட்ட பசுந் தீவனங்கள் நன்கு வளர்ந்தன.
கூடுதல் வருவாய் (Extra income)
இதனால் கடந்த 6 மாதங்களாகக் கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
விலை கொடுத்து தீவனம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாததால், விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பு செலவு கணிசமாகக் குறைந்ததுடன், கூடுதல் வருவாயும் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் வெயில் (Heavy sun)
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாகக் கடுமையான வெயில் காணப்படுகிறது. வாட்டி வதைக்கும் வெப்பம் தாங்காமல் விளைநிலங்கள், தரிசு நிலங்களில் செடி, கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன.
பசுந்தீவனத் தட்டுப்பாடு (Green fodder shortage)
இதன் காரணமாக கால்நடைகளுக்கு பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கான பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!
கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!