நெற்பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதலால் 5 முதல் 20 சதவீத பயிர் சேதம் (Crop Damage) ஏற்படுகிறது. முன் பட்டத்து பயிர்களை விட பின் பட்டத்து பயிர்களே அதிகளவில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
குருத்துப் பூச்சித் தாக்குதல் (Scirpophaga incertulas)
புழுக்கள் செடிகளின் அடிப்பாகத்தில் தண்டை துளைத்து உட்சென்று உட்திசுக்களை தின்பதால் நடுக்குருத்து மடிந்து விடும். இளம் நாற்றை புழு தாக்கும் போது நடுக்குருத்து வாடி குருத்தழிவு உண்டாகும். பூக்கும் பருவத்தில் புழு தாக்கினால் கதிர் காய்ந்து வெண்ணிற பதர்களாக வெளிவரும். இதை வெண்கதிர் என்பர். வாடிய குருத்து அல்லது வெண் கதிரை இழுத்தால் தனியாக வந்துவிடும்.
தடுக்கும் முறைகள் (Control Methods)
இதை கட்டுப்படுத்துவதற்கு தழைச்சத்தை தேவைக்கு அதிகமாக அல்லது ஒரே தடவை மொத்தமாக இடக்கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். நாற்றுகள் நெருக்கமாக நடக்கூடாது. இலைகளின் நுனியில் முட்டை குவியல் இருப்பதால் எளிதில் சேகரித்து அழிக்கலாம். நடுவதற்கு முன் நாற்றுகளின் நுனிப்பகுதியை கிள்ளி விடுவதன் மூலம் முட்டை குவியல்களை அழிக்கலாம்.
வாடிய நடுக்குருத்துகளை அழிக்க வேண்டும். இரவில் எக்டேருக்கு ஒரு விளக்குபொறி வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பயிர் நடவு செய்த 30 மற்றும் 37 நாட்களில் டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் எனப்படும் முட்டை ஒட்டுண்ணிகளை 2 சி.சி. அளவில் இட வேண்டும்.
எக்டேருக்கு 25 கிலோ வேப்பங்கொட்டை சாறு அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். பயிர் அறுவடைக்கு (Harvest) பின் உடனேயே உழவு செய்வதன் மூலம் பயிரின் துாரில் இருக்கும் புழுக்களை அழிக்கலாம்.
சேதம் அதிகமாக இருந்தால் எக்டேருக்கு ஒரு கிலோ அசிபேட் அல்லது 62.5 கிலோ பைப்ரோரினில் பூச்சிமருந்தை தெளிக்கலாம்.
-உஷாராணி, உதவி பேராசிரியர்
பூச்சியியல் துறை
ஹேமலதா, ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
மதுரை
94884 48760
மேலும் படிக்க