இரசாயன இடுபொருட்களை முற்றிலும் தவிர்த்து மட்கிய வேளாண் கழிவுகள், தொழு உரம், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள் இயற்கையில் கிடைக்கும் தாவர பொருட்கள், இயற்கை உயிரிகளை கொண்டு பயிர் மேலாண்மை செய்வதே அங்கக வேளாண்மை. அங்கக விதை உற்பத்தி முறையில் குறுகிய கால பயிர்கள் அங்கக வேளாண் பொருள் என்ற தரத்தை பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு பின்னும் நீண்ட கால பயிர்கள் 3 ஆண்டுகளுக்கு பின்னும் சான்று பெற முடியும்.
இரசாயன உரம் பயன்படுத்தும் நிலத்தின் பாசன நீர், இயற்கை வேளாண் நிலத்தில் கலக்காத அளவு வரப்பை உயர்த்தவேண்டும். அங்கிருந்து மழை, வெள்ளம் சேருவதையும் தடுக்க வேண்டும். சணப்பை, தக்கைபூண்டு விதைத்து மடக்கி உழுவதன் மூலம் 10 டன் வரை பசுந்தாள் உரம், 50 -முதல்- 80 கிலோ வரை தழைச்சத்து கிடைக்கிறது.
ஊட்டச்சத்து (Nutrients)
நடவு வயலில் கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 5 டன் மண் புழு உரம் அல்லது தென்னை நார் கழிவுகளை இட்டு உழ வேண்டும். நன்கு மட்கிய கோழி எரு, வெள்ளாடு, செம்மறி ஆடுகளின் எருவை பயன்படுத்தலாம். வேம்பு, புங்கம் புண்ணாக்கு இடும்போதும் பயிருக்கு ஊட்டச்சத்து விரைவில் கிடைக்கிறது.
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ், அசோலா மற்றும் நீல பசும் பாசிகள் தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாற்றுகிறது. நடவு வயலில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தலா 10 பாக்கெட்டுகள், 25 கிலோ தொழு உரம், 25 கிலோ மண்புழு உரத்தை மண்ணுடன் கலந்து வயலில் இடவேண்டும். எக்டேருக்கு 2.5 கிலோ சூடோமோனஸ் உயிர் உரத்தை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவிற்கு முன்பாக இட வேண்டும்.
அங்கக விதை உற்பத்தி (Organic Seed Production)
அங்கக விதை உற்பத்தியில் பயிரிடப்படும் ரகமானது நோய் எதிர்ப்புத் திறன், அதிக மகசூல் தருவதுடன் அங்கக இடுபொருட்களை எளிதில் எடுத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். வேம்பு இலைத்துாள், வேம்பு எண்ணெய், புங்கம் எண்ணெய், வசம்பு, மஞ்சள் கிழங்கு பொடி போன்றவை பூச்சி மேலாண்மைக்கும் வேம்பு சார்ந்த பூஞ்சாண கொல்லிகள் நோய் மேலாண்மைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தாவர இலை கரைசல், பஞ்சகாவ்யா, கடல்பாசி உர திரவத்தை விதை நேர்த்திக்கும், இலை வழி உரமாகவும் பயன்படுத்தினால் பயிர் வளர்ச்சி மேம்படும்.
சுஜாதா, பேராசிரியர்
விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை,
வேளாண்மை கல்லுாரி மதுரை
94437 90200
மேலும் படிக்க
ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டிராக்டர்!