பஞ்சு விலை, தற்போது படிப்படியாக இறங்க துவங்கி இருப்பது, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி உற்பத்தி துறையினரை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை சரிவு, ஜவுளித் துறையினரிடையே பெரும் மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிடுகிடு உயர்வு
பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்து, 2021 அக்டோபரில் துவங்கியது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வந்த பஞ்சு விலை புதிய உச்சத்தை எட்டியது. முன் எப்போதும் இல்லாத வகையில், பஞ்சு விலை கேண்டி எனப்படும், 356 கிலோ, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1 லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்தது. மேலும் உயர்ந்து, ஒரு கேண்டி பஞ்சு அதிகபட்சமாக, 1.15 லட்சம் ரூபாய் வரை உச்சத்தை தொட்டது.இதனால் கடந்த இரு மாதங்களாக, 1.08 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலை கொண்டது. வரலாறு காணாத பஞ்சு விலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி உற்பத்தி துறையையும் ஆட்டம் காணச் செய்தது.
உற்பத்தி குறைந்தது
தமிழக நுாற்பாலைகள், அனைத்து ரக நுால் விலைகளையும் தொடர்ந்து உயர்த்தின. பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி நகரங்களுக்கு, வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கு 'ஆர்டர்' வருகை வெகுவாக குறைந்தது. ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பருத்தி நுால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளது. இது, நுாற்பாலைகளுக்கு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இழப்பை சமாளிக்க, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழக நுாற்பாலைகள், நுால் உற்பத்தியை குறைத்துள்ளன. இதையடுத்து, உள்நாட்டில் பருத்தி பஞ்சு தேவை குறைந்துவிட்டது.
அடுத்த சீசன்
வரும் செப்டம்பரில், மீண்டும் பருத்தி சீசன் துவங்க உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது விலை குறையும். இக்காரணங்களால், தற்போது பஞ்சு விலை படிப்படியாக இறங்க துவங்கியுள்ளது.
ரூ.96,000
இந்நிலையில் ஒரு கேண்டி பஞ்சு விலை, 96 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. பஞ்சு விலையின் இறங்கு முகம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உட்பட தமிழக ஜவுளி துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
புதிய சீசன் துவங்கும் போது, பஞ்சு விலை சரிந்து, நுால் விலையும் சீராகும், ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்களை பெறுவது எளிதாகும் என்ற நம்பிக்கையுடன் ஜவுளித்துறையினர் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...