விவசாயத்தை தொடர்ந்து ஊக்குவிக்க அடிப்படைத் தேவைகளுள் விதைகள் மிக முக்கியமானவை. "உணவிற்கே கையேந்தும் நிலை வந்தாலும், விதை நெல்லை உணவிற்காக பயன்படுத்த மாட்டார்கள் விவசாயிகள்". அந்த அளவிற்கு விதைகள் விவசாயிகள் வாழ்வில் உன்னதப் பணியை செய்கிறது. அறுவடையின் போதே அடுத்த, சாகுபடிக்கு விதைகளை சேமித்து வைத்தால், விதைத் தட்டுப்பாட்டை முற்றிலும் தவிர்த்து விடலாம். விதைகளை சேமிப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளது. முறையாக விதைகளை சேமிக்கவில்லையென்றால், வீணாகி விடும்.
விதை சேமிப்பு (Seed Savings)
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரைப்படி, விதைகளை மாட்டுச்சாணத்தில் வைத்து சேமித்த வந்தால், எக்காலத்திலும் விதைகள் கெடுவதில்லை. ஆனால், சிறிய அளவிலான விதைச் சேமிப்பிற்கு மட்டுமே இம்முறை பயன்படும். ஏனென்றால், மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அதிக அளவிலான விதைகளை சேமிப்பது இயலாத காரியம்.
அறுவடை காலம் முதல் நடவு காலம் வரை விதையின் அதிகபட்ச முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தைப் பராமரித்தலே விதை சேமிப்பாகும். விதை சேமிப்பு கிடங்குகளை சுத்தமான முறையில் கையாள வேண்டும். அவ்வப்போது சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். மாதம் ஒருமுறை விதைகளின் தரத்தை ஆய்வு செய்வது அவசியமாகும்.
விதை வகைகள் (Types of seeds)
சர்வதேச விதைகள் தினமான இன்று (ஏப்ரல் 26), மூன்று வகையான விதைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
- பொறுக்கு விதைகள்
- கலப்பின விதைகள்ம
- மரபணு மாற்றப்பட்ட விதைகள்
முதலாவதாக பொறுக்கு விதைகள். இவ்விதைகள், காலங்காலமாக உழவர்களால் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருபவை. பல்லாயிரம் ஆண்டுகள், பல இயற்கை சீற்றங்கள், பூச்சித் தாக்குதல், பல வகைப் பருவங்களையும் எதிர்கொண்டு தரமான விதைகளாக உள்ளவை. வறட்சியைத் தாங்கி, விவசாயிகளுக்கு நல்ல மகசூலை அளித்து, விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவை தான் பொறுக்கு விதைகள்.
இரண்டாவதாக கலப்பின விதைகள். வீரிய விதைகளாக அறிமுகமான ஒட்டு விதைகள். வறட்சியைத் தாங்கும் சக்தியும் குறைவு. நோய் எதிர்ப்பாற்றலும் மிகக் குறைவு. ஆனால், இவ்விதைகள், விளைச்சலை மட்டுமே குறிக்கோளாக்கி உருவாக்கப்பட்டவை. மீண்டும் முளைத்தாலும், முதல் தடவை போல் மகசூலைத் தருவதில்லை இந்த கலப்பின விதைகள். அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்விதைகளைத் தயாரிப்பதால், விலை அதிகம்.
மூன்றாவதாக மரபணு மாற்றப்பட்ட விதைகள். ஒரு பயிரையும், ஒரு நுண்ணுயிரியின் மரபணுவையும் இணைத்து தான் இவ்விதைகள் உருவாக்கப்படுகிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தான் இவற்றை தயாரிக்கிறது. மீண்டும் முளைக்கும் திறனற்றதால், விவசாயிகள் ஒவ்வொரு தடவையும் பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். விலையோ மிக அதிகம்.
மூன்று வகையான விதைகளிலும், பொறுக்கு விதைகள் இயற்கையானவை மற்றும் மண்ணோடு தொடர்பு கொண்டது. இவ்விதைகளில் இருந்து உருவாகும் உணவு, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், மரபணு மாற்றப்பட்ட விதைகள் நம் உணவை நஞ்சாக்கி விடும். ஆகையால், விதைத் தேர்வில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க
வியாபாரிகளின் கையில் நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் ஆதங்கம்!
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம்!