மதுரை திருமங்கலம் பகுதி விவசாயிகள் தண்ணீர் தேவை மற்றும் செலவைக் குறைக்கும் விதமாக வரகு, குதிரைவாலி, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானிய வகைகளை அதிகளவில் பயிரிடத்துவங்கியுள்ளனர்.
நிவர் புயல் காரணமாக வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்தாலும் மத்திய மாவட்டங்களாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. திருமங்கலம் ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அமைந்துள்ளன. தற்போதைய மழையில் பெரிய அளவில் கண்மாய்கள் நிரம்பாததால் நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நெல்லுக்கு மாற்றான சிறுதானியங்கள்
நெல் பயிரிட அதிகளவில் தண்ணீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று யோசனையாக குதிரைவாலி, வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானிய வகைகளை பயிரிடத் துவங்கியுள்ளனர். குறைந்த செலவில் அதிகளவில் விளைச்சலுடன் நிறைவான லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த, சிறுதானியங்களை பயிரிட மானாவாரி மற்றும் புன்செய், நன்செய் நிலங்களே போதுமானதாக உள்ளது. மேலும் குறைந்த தண்ணீரே போதுமானதாகும்.
கொரோனாவை விரட்டும் சிறுதானியங்கள்
கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் பலரும் நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சிறுதானியங்களை தேடி வாங்கி வருகின்றனர். இதனால், சிறுதானியங்களும் தற்போது அதிகளவில் விற்பனையாகிறது. ஒரு குவிண்டாலுக்கு சிறுதானியங்கள் 1500 முதல் 3000 வரையில் விலை போகிறது. இதையொட்டி, இந்தாண்டு பல்வேறு விவசாயிகளும் குதிரைவாலி, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை திருமங்கலம் ஒன்றியத்தில் பயிரிட்டு விவசாயம்செய்து வருகின்றனர்.
உலர்களம் தேவை
விளைந்த சிறுதானியங்களை பிரித்து காயவைக்க போதுமான அளவு உலர்களங்கள் இல்லாததால், விவசாயிகள் அவற்றை சாலையில் பரப்பி காயவைத்து தரம்பிரிக்கின்றனர். இவ்வாறு பிரிக்கும் போது அவற்றால் விபத்து ஏற்படுவதாகவும், அதைத் தடுக்கும்வகையில் உலர்களங்கள் அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பிடிக்க...
பன்றிகள் தொல்லை...! சேலையில் வேலி கட்டி வயலை பாதுகாக்கும் விவசாயிகள்!
"Delhi Chalo" மேலும் 2 லட்சம் விவசாயிகள் படையெடுப்பு! தீவிரமடையும் போராட்டம்!
அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!